மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் வகையில் வடிக்கப்பட்ட சீர்திருத்த கருத்துள்ள நுால். யானைக்கு, 11 பெயர்கள் உண்டு என, அதற்கான காரணத்தை விளக்குகிறது. பழங்காலத்தில் குழந்தைகளை யானை மீது ஏற்றி ஊர்வலம் வந்து, அச்சத்தைப் போக்குவர் வீரர்கள். அச்செயல் பின்னாளில், குழந்தையை யானை மீது அமர வைத்து இறக்குவதால், தோஷம் நீங்கும் என மூட நம்பிக்கையாகிவிட்டது.
போரில் மரணம் அடைந்த வீரரை, ஊர் மக்கள் கல்லில் வடித்து பெயர் எழுதி வைப்பர். படிப்பறிவற்றோர், ‘ஐயன் யார்... ஐயன் யார்...’ என்று விசாரிப்பர். இதுவே பிற்காலத்தில், ‘ஐயனார்’ என்ற பெயரில் வழிபாடாகியது.
பண்டைக் காலத்தில் வேள்வியில் ஆடு பலியிடுவர். அதை, ‘வேள்வி ஆடு’ என்பர். அது மருவி, ‘வெள்ளாடு’ என வழங்கப்படுகிறது. மூட நம்பிக்கை நீக்கி, நல்வாழ்வு வாழ வேண்டும் என நல்ல கருத்துக்களை தரும் நுால்.
–
புலவர் இரா.நாராயணன்