குரு பக்தி யோகாவைப் பற்றி விளக்கங்களுடன் எழுதப்பட்டுள்ள நுால். குருதேவரின் அருள், அமரத்துவம் மற்றும் அமைதிக்கு அழைத்துச் செல்லும் விதம் குறித்து கூறியுள்ளது. ஒருவர் நல்ல சீடன் ஆகும் முறையை, குருதேவர் சுவாமி சிவானந்தர் தெளிவுபடுத்தி உள்ளார். யார் ஒருவர் குரு பக்தி யோக உணர்ச்சியால் நிரப்பிக் கொள்கிறாரோ, அவரை மாயையும், அகங்காரமும் எதுவும் செய்ய முடியாது.
இந்த யோகத்தைச் செய்பவர்கள், மற்ற எல்லாவிதமான யோகங்களிலும் வெற்றியடைய முடியும் என்று விளக்குகிறது. சிரத்தை, நம்பிக்கை, பணிவு ஆகியவற்றை தகுதியாகக் கொண்டு யோகத்தைக் கடைப்பிடித்தால் பலன்களையும் அடையலாம் என வழிகாட்டுகிறது.
குரு பக்தி யோகம், குரு பக்தியின் பெருமை, கட்டமைப்பு உள்ளிட்ட தகவல்கள் 10 அத்தியாயங்களில் அளிக்கப்பட்டுள்ளன. குரு பூர்ணிமா, பகவத் கீதையில் குரு பக்தி, குரு தத்துவம், குரு அருளைப் பெறுவது என பலவித தகவல்கள், 16 பகுதிகளில் விளக்கமாக கூறப்பட்டுள்ளன. குரு பக்தி யோகம் பற்றி தெரிந்து கொள்ள வழிகாட்டும் நுால்.
–
முகில் குமரன்