எண்ணத்தை மொழியாக்கி, எளிமையை வழியாக்கி, வண்ணத்தை இனிதாக்கி வார்த்தைகளைக் கவிதையாக்கு, என கவிதை எழுத கற்றுத் தரும் நுால். கவிதைக்கு உரிய சந்த நயம் இயல்பாகத் தவழ்கிறது. கொரோனா கொடிய வாள் அது கொலைகளைச் செய்யக்கூடியது. விரதங்களில் வாழும் மக்களிடம் வீண் செயலைக் காட்டாதே என்று சமுதாய நலன்களோடு வலம் வருகிறது.
நலம் பெறுவோம் வாரீர், முயற்சி தருமே வெற்றிக்கனி, கவிதை எழுது, வெற்றிக்கு வழி, ஞாயிறு போல் ஒளி வீசு போன்ற பொருண்மைகளில் அமைந்த கவிதைகள் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக உள்ளன. இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகிறது. மரம் என்றால் நிழல் தரும். மனிதர் என்றால் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற வரிகள் சிந்தனையை தட்டி எழுப்பும். பெரியவர்களின் முதிர்ந்த அனுபவத்தை பேசுகிறது.
பயனுள்ள கருத்துக்களை எளிய இனிய நடையில் சந்த நயத்தோடு விளக்குகிறது. கவிதை எழுத முயற்சி செய்வோருக்கு உதவும் நுால்.
–
பேராசிரியர் இரா.நாராயணன்