சர்க்கரை நோய், நீரிழிவு நோய் என்ற பெயர்களில் அழைக்கப்படும் இந்த கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருந்தாலும், அதன் தன்மை பற்றி அறிந்தவர்கள் மிகக் குறைவே. இந்த நோய் இரு வகைப்படும்.
டைப் – 1 மற்றும் டைப் – 2. இதில், டைப் – 2 நோய் மாத்திரைகள் மூலமும், உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றால் கட்டுப்படுத்தக் கூடியது. ஆனால், டைப் – 1 நோய் இன்சுலின் என்ற ஊசி மருந்தால் மட்டுமே கட்டுப்படுத்தக்கூடியது. இந்த புத்தகம் டைப் – 1 நோய்க்கான இன்சுலின் ஊசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டதை விவரிக்கிறது. நோயாளிகளின் அனுபவங்களை இடையிடையே விவரித்துள்ளதால், நாவல் படிப்பது போன்ற உணர்வை தருகிறது.
சர்க்கரை கோளாறு சிகிச்சை வரலாற்றில், 1921 திருப்புமுனையை ஏற்படுத்திய ஆண்டு. கனடா, டொரான்டோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பிரட்ரிக் பேன்டிங், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் சார்லஸ் போஸ் இருவரும், பேராசிரியர் ஜே.ஜே.ஆர்.மேக்லியோடு, உடலியல் துறை, டாக்டர் ஜேஸ் கோலிப், உயிர் வேதியியலாளர் உதவியுடன் இன்சுலினை கண்டுபிடித்தனர்.
இன்சுலின் கண்டுபிடிப்பதற்கு முன், டைப் – 1 சர்க்கரை கோளாறுடன் பிறக்கும் குழந்தைகள், பிறந்த ஒரு சில மாதங்களிலேயே இந்தக் கோளாறுக்கு பலியாகி விடுவர். சர்க்கரை கோளாறு சிகிச்சையில் வல்லுனரான டாக்டர் வி.மோகன், இந்த புத்தகத்தில், நம் நாட்டில் சர்க்கரை கோளாறு ஆராய்ச்சி மற்றும் சிகிச்சையில் மிகச் சிறப்பாக பணியாற்றுபவர்.
நாட்டின் முதல் சர்க்கரை கோளாறு சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தை, 1920ல் கல்கத்தாவில் துவக்கிய டாக்டர் ஜே.பி.போஸ் போன்றோர் பற்றி எழுதியுள்ளார். சர்க்கரை கோளாறு உள்ளவர்களின் நிஜ அனுபவங்களான காதல், அன்பு, சோகம், ஏமாற்றம், நிராகரிப்பு என்று பதிவு செய்துள்ளார்.
நாளுக்கு நாள் தொழில்நுட்பத்தில் நவீன மாற்றங்கள் ஏற்பட்டு, இன்சுலின் எடுத்துக் கொள்வதில் பல வசதிகள் வருகின்றன. பேன்டிங், போஸ், டாக்டர் மோகனின் தந்தை விஸ்வநாதன் என இந்த துறையில் சாதித்த முன்னாள் ஹீரோக்கள் இன்று இருந்திருந்தால், அவர்கள் அடித்தளம் இட்ட பல விஷயங்கள் எந்த அளவு மேம்பாடு அடைந்து, சர்க்கரை பாதிப்பு சிகிச்சையில் பலன் தந்திருக்கிறது என்பதை கண்டு நிச்சயம் மகிழ்ந்திருப்பர்.
–
இளங்கோவன்