காலத்தைக் கடந்து நின்று, இன்றும் போற்றப்படும் சங்க இலக்கியம் பற்றி ஆய்வு செய்துள்ள நுால். இதில், எட்டு கட்டுரைகள் பல செய்திகளை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு எடுத்துரைக்கின்றன. சங்க இலக்கிய மேற்கோள்கள் பொருத்தமாக அமைந்துள்ளன.
சங்ககாலத் தொழில்கள் என்ற கட்டுரை, ஐந்திணைகளிலும் வாழ்ந்த மக்கள் சுற்றுப்புற சூழ்நிலையைப் பயன்படுத்தி வந்ததை விவரிக்கிறது. வேட்டையாடுதல், தேன் எடுத்தல், ஆடு மேய்த்தல், உழவுத் தொழில், மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல், முத்துக் குளித்தல் போன்றவை பற்றிய தகவல்களைத் தருகிறது.
தொல்காப்பியம் வழி அறியும் சங்க வாழ்வியல் இசை, சங்க இலக்கியங்களில் இசைக்கருவிகள், சங்க இலக்கியங்களில் தோல் கருவிகளும் துணை கருவிகளும் ஆகிய மூன்று கட்டுரைகளும் இசையோடு உள்ள தொடர்பை ஆராய்கின்றன. குறிப்பிடத்தகுந்த பல செய்திகளைக் கொண்டுள்ளன.
திருமுருகாற்றுப்படையில் முருகனின் வடிவழகு என்ற கட்டுரை முருகனின் வடிவழகையும், ஆறுபடை வீடுகளின் சிறப்பையும் உணர்த்துகிறது. அறத்தை எந்த அளவுக்கு பண்டைய மன்னர்கள் போற்றினர் என்பதை தரும் நுால்.
–
ராம.குருநாதன்