பல தலைப்புகளில் 100 கவிதைகளின் தொகுப்பு நுால். ‘உள்ளம் தெளிய கல்வி ஓரழகு; உலகம் புகழ் அறிவு பேரழகு’ என்னும் அடிகளிலும், ‘குதிரிலே தானியங்கள் நிறையணும்; குடும்பக் கார்டெல்லாம் மறையணும்; கையேந்தும் காரணத்தை ஒழிக்கணும்; கல்வியில்லா ஊரனைத்தும் விழிக்கணும்; பொய்யேந்தும் அரசியலைக் கழிக்கணும்’ என்ற அடிகளில் கல்வியின் இன்றியமையாமை சொல்லப்பட்டு உள்ளது.
கல்வியறிவு இருந்தால் நாடு தன்னிறைவு பெறும் என வலியுறுத்துகிறது. ‘கற்பவர் வாழ்வார் கற்றபடி; கருணையும் அறிவும் உற்றபடி’ என்ற பாடலடிகள், பாரதிதாசனின் ‘நுாலைப் படி; சங்க நுாலைப் படி’ என்ற பாடலை நினைவூட்டுகிறது. மழலையர், மகளிர், பெண்ணுரிமை, உழவர்கள், தொழிலாளர்கள், சுற்றுச்சூழல், வேளாண்மை எனப் பல பொருண்மைகளைப் பற்றிய பாடல்களில் மனித நேயம், உலக ஒற்றுமை பற்றிய சிந்தனைகள் விதைக்கப்பட்டு உள்ளன. திரைப்படப் பாடல்கள் சிலவும் இடம் பெற்றுள்ளன. முன்னேற முயலும் மாணவ – மாணவியருக்கு பயனுள்ள நுால்.
–
புலவர் சு.மதியழகன்