அறிவில் உதயமாகி, இதயத்தில் இருப்பிடமாகும் சந்தச் சிந்தனைகள் இதயக் குரலாக பன்முகத் தலைப்புகளில் தரப்பட்டுள்ள கவிதை நுால். குறள் வடிவில் ஏழு சீர்களில் செதுக்கப்பட்டுள்ளன. யாப்பு இலக்கண மரபுக்குள் நில்லாமல், வசன கவியாக வடிக்கப்பட்டுள்ளன. இன்றைய சமூகச் சிக்கல்களுக்கு தீர்வு தேடுகிறது.
பருவ நிலை மாற்றம், நகர்மயமாதல், வாகன வளர்ச்சி, நீர்நிலைகள் அபகரிப்பு, அழியும் இயற்கை, பெருகும் ஊழல் என கேடுகளுக்கு பாடல்கள் மூலம் தீர்வு தேடுகிறார். மொழியே விழி, பொதுவுடைமை, மனித நலன், பொது அறிவு, திரும்பிப் பார், முத்துக்கு முத்தாக, வாழ்வே மாயம், சிந்திப்போமா, நம் நாடு, மாறியது உலகம் என எளிய தலைப்புகளில் உள்ளன. ஒவ்வொரு தலைப்பிலும் 10 சிறிய தலைப்புகளில், 1,000 கவிதைகள் உள்ளன.
முதலில் திருக்குறள் வாழ்த்தில், வானம் பொய்ப்பினும் வள்ளுவனின் ஞானம் பொய்க்காது, எதிர்மறை ஏதும் இன்றி ஏற்கப்பட்ட பொதுமறை, வாடும் குறிஞ்சி மலர், வாடாது குறள் மலர் என பொதுமையாக போற்றுகிறது. சிந்தனையைத் துாண்டும் இனிய கவிதைக் குறள்.
–
முனைவர் மா.கி.ரமணன்