அண்ணாமலை, நினைத்தாலே முக்தி தரக்கூடிய பெருமையை உடையது. சிவனே மலையாக அமர்ந்திருக்கும் தலம் தான் அண்ணாமலை; மலையே இறைவனாக, இறைவனே மலையாகக் காட்சி அருளும் ஒரே தலம்.
இந்த மலையைச் சுற்றி மூன்று யோசனை துாரம் உள்ள பகுதிகளில் வாழ்பவர்களுக்கு இந்த மலையே குருவாக அமைகிறது என்றும், அவர்களுக்கு ஆன்ம ஞானத்தை இம்மலையே வேண்டியது வேண்டியபடி தரும் தவயோக நிலையை அடைந்த சித்தர்களும், மகான்களும், யோகிகளும் தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு, தம் தவ ஆற்றலால் அருள்பாலித்து அவர்கள் தம் வாழ்க்கையை உயர்த்துகின்றனர்.
ஆன்மிக மறுமலர்ச்சியை அவர்கள் வாழ்வில் உண்டாக்குகின்றனர். அத்தகைய மகான்களுள் குறிப்பிடத்தக்க சில மகான்களைப் பற்றி பா.சு.ரமணன் எழுதிய இந்நுால் பேசுகிறது. பதினைந்தாம் நுாற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் சித்தர் இடைக்காடர் முதல் குகை நமசிவாயர், குரு நமசிவாயர், ஸ்ரீ அம்மணி அம்மாள், அருணகிரிநாதர், ஈசான்ய ஞான தேசிகர், விட்டோபா சுவாமிகள், சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்.
பகவான் ரமணர், ஞானானந்தகிரி சுவாமிகள், வள்ளிமலை சுவாமிகள், யோகி ராம்சுரத்குமார் வரையிலான மகா ஞானிகளின் தெய்வீக வாழ்க்கை, அவர்களுடைய உபதேசங்கள், அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள், அவர்களைப் பின்பற்றிய சீடர்கள் போன்ற பல தகவல்கள் சுருக்கமாக இந்நுாலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
–
இளங்கோவன்