தொண்டை மண்டலத்தில் வரலாற்று சிறப்பு மிக்க காவேரிப்பாக்கம் கோவில்களில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள், சிற்பங்கள் பற்றி ஆராய்ந்து தகவல் தரும் அற்புத நுால். பல்லவர்கள், பிற்காலச் சோழர்கள், ராஷ்டிரகூடர் காலத்தோடு தொடர்புடைய பங்களிப்பு பற்றி தகவல்களை தருகிறது.
பல்லவர்களால் பிரமதேயமாக உருவாக்கப்பட்ட ஊர் காவேரிப்பாக்கம். ஒரு காலத்தில் காவடிப்பாக்கம், காவிதிப்பாக்கம் என அழைக்கப்பட்டது. அவனி நாராயண சதுர்வேதிமங்கலம் என்றும் அழைக்கப்பட்டது.
இங்குள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் முதலாம் ஆதித்தன் காலத்திய கல்வெட்டு காவிதிப்பாக்கம் என்றே அழைக்கிறது. தெலுங்கு சோழ அரசர் விஜயகண்ட கோபாலதேவா காலத்தில், காவிரிப்பாக்கம் என்றானது. மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் காவேரி நாடன்பாக்கமாக இருந்து பின் காவேரிப்பாக்கம் ஆயிற்று என்பர்.
இங்குள்ள வரதராஜ பெருமாள் கோவில், கொங்கணேஸ்வரர் கோவிலில் காணப்படும் கல்வெட்டுகள் பல்லவர், சோழர், பாண்டியர், விஜய நகர, இசுலாமியர், நாயக்க மன்னர்கள் காவேரிப்பாக்கத்தோடு அரசியல் தொடர்பு கொண்டிருந்ததை காட்டுகிறது.
பிரெஞ்சுப் படை, காவேரிப்பாக்கத்தில் உள்ள கோட்டையில் நடந்த கர்நாடகப் போரின் போது வெளியேறியது. இங்கிருக்கும் கோவில்கள் பற்றிய செய்திகள் ஆராய்ச்சியாளரால் விரிவாக விளக்கம் பெற்றுள்ளன.
கல்வெட்டு செய்திகள் காவேரிப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் குறிப்பாக சமயம், கலை தொடர்பானவற்றில் சிறப்பிடம் பெற்றிருந்தது. கோவில்களில் காணப்படும் பல வகை வரலாற்றுச் சிறப்புள்ள சிற்பங்கள் சிறப்பாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. நுாலில் விரிவான பகுதியாக இது உள்ளது. இறுதி இயல், ஆட்சி முறை, சமூகப் பண்பாடு, பொருளாதார நிலை பற்றி விளக்குகிறது.
ஊராட்சி முறை, (சபை) வாரியங்கள், கோவில் நிர்வாகம், நில அளவை முறை போன்ற தகவல்களையும் விவரிக்கிறது. தமிழக வரலாறு, பண்பாட்டில் காவேரிப்பாக்கத்தின் பங்கை சிறப்பாக உணர்த்தியுள்ள நுால். அரிய உழைப்பில் உருவாகியுள்ள வரலாற்று பொக்கிஷம்.
–
ராம.குருநாதன்