கருங்கல் மனமும் கசிந்து உருகும்படி பாடிய திருவாசகத்தின் பதிக விளக்கத்தை தரும் நுால். பாடல் எழுந்த சூழல் வரலாறு, பதிகத்தின் உட்பொருள் பற்றி விளக்கப்பட்டுள்ளது. தேவாரம் முழுதும் இறையனுபவத்தில் ஆய்ந்து தோய்ந்து பாடப்பெற்றவை. திருவாசகம் அவற்றிலிருந்து சற்றே மாறுபட்டு மாணிக்கவாசகர் பெற்ற அனுபவத்தைச் சாறு பிழிந்து வடித்து தருகிறது.
ஒவ்வொரு பதிகத் தலைப்பிலும் விளக்கம் தந்ததோடு எந்த பா வகையைச் சார்ந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருவாசகப் பாடல் மூலமும் பொதிந்த உட்பொருளை பதிக விளக்கமாக தரப்பட்டுள்ளது.
கற்கண்டை எங்கு சுவைத்தாலும் இனிமை பயப்பது போல, திருவாசகத்தின் எந்தப் பகுதியைப் படித்தாலும், பக்திச் சுவையும், மாணிக்கவாசகரின் அனுபவமும் வெளிப்படும். திருவாசகப் பாடல் படித்துப் பயன் பெறவும், பதிக விளக்கம் தெளிவாக அறிந்து கொள்ளவும் உதவும் நுால்.
–
புலவர் இரா.நாராயணன்