இந்திய விடுதலைக்குப் போராடிய வீரத்தமிழர் ஜய்ஹிந்த் செண்பகராமன் குறித்து எழுதப்பட்டுள்ள நுால். விடுதலைக்காக போராடிய காலத்தில், ‘ஜய்ஹிந்த், வந்தே மாதரம் போன்ற சொற்கள் எழுப்பிய சுதந்திர உணர்ச்சியை மறக்கடிக்கும் நிலை இன்று உள்ளதாக கூறி, ஜய்ஹிந்த் என்ற வீர முழக்கத்தை முதலில் எழுப்பியது செண்பகராமன் என்பதை உணர்த்துகிறது.
ஆங்கிலேய அரசுக்கு பயத்தை ஏற்படுத்தும்படி செண்பகராமன், ‘எம்டன்’ என்ற கப்பல் இயக்கியது குறித்தும் பேசப்பட்டுள்ளது. ஹிட்லர் இந்தியர்களை மதிப்பு குறைவாக பேசியபோது, அக்கருத்தை மாற்றிக் கொள்ள செய்தவர் செண்பகராமன் என்ற தகவல் கூறப்பட்டுள்ளது.
முதல் உலகப் போர் நிகழ்வுகள், பாரதமாதா வாலிபர் சங்கம், ஜெர்மனியில் கல்வி கற்றது போன்ற செய்திகள் உள்ளன. நிகழ்வுகளின் புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன. ஜய்ஹிந்த் என்ற சொல் பற்றியும், செண்பகராமன் பற்றியும் அறிய உதவும் நுால்.
–
முகில் குமரன்