கிராமத்தில் பிரசவம் எப்படி நடக்கிறது என்பதை அழுத்தமாக சொல்லும் நாவல். சுகப்பிரசவம் ஆரோக்கிய வாழ்வு கொடுப்பதை அலசுகிறது.
கதை நாயகி பெருமாத்தா, பாசமான தாயாக, பிறருக்கு உதவும் குணம் கொண்டவராக, தன்னம்பிக்கை ஊட்டுபவராக திகழ்கிறார். சுற்றுவட்டார பெண்களுக்கு, பெருமாத்தா சொல்லு தான் வேதவாக்கு! அவர் கணிப்பு தப்பாது என்ற நம்பிக்கை.
தற்கொலைக்கு முயன்றவரை, சாதுர்யமாக காப்பாற்றி, ‘மரணம் இயற்கையாக வரணும்; இஷ்டத்துக்கு மாய்ச்சிக்க உரிமை இல்லை’ என பேசும் தன்னம்பிக்கை வார்த்தை பொதுவானது.
கர்ப்பிணிகளின் பேறு கால உடல் நலனை, நாட்டுப்புற மருத்துவ ரீதியாக அணுகிய முறையை அறிய முடிகிறது. குழந்தையை கால் பிடித்து துாக்கி, குலுக்கி, எண்ணை தடவி நீவியபடி குளிப்பாட்டும் அழகை வர்ணிக்கிறது.
கிராம மக்களின் பழக்க வழக்கங்கள், மருத்துவம், இயற்கை நேசிப்பை கண் முன் நிறுத்துகிறது. சிவகாசி வட்டார மொழியில் உள்ள நுால்.
–
டி.எஸ்.ராயன்