நடிகர் சிவாஜி கணேசன் பற்றிய நினைவுகள், அவரை சந்தித்து உரையாடி சேகரித்த செய்திகள், பிரபல வார இதழ்களில் வெளியான குறிப்புகளை தொகுத்து எழுதப்பட்டுள்ள நுால். விழிகளின் வசீகரக் கூர்மை, ராஜ கம்பீரத் தோற்றம், சிம்மக் குரல், ஒன்பது வகை பாவங்களை 90 விதமாக நடித்துக் காட்டும் ஆற்றல் பற்றி எல்லாம் தெரிவிக்கிறது.
கட்டபொம்மன், வ.உ.சி., பாரதியார், கர்ணன், சிவபெருமான், அப்பர், அம்பிகாபதி, பகத் சிங், திருப்பூர் குமரன், ராஜராஜ சோழனை சிவாஜி வடிவில் தரிசித்து கொண்டிருப்பதை பற்றி கூறுகிறது.
சாமானியன் முதல் சரித்திர நாயகர்கள் வரை சிவாஜி ஏற்ற பாத்திரங்கள், அவர் நடித்த திரைப்படங்கள், வெற்றிச் சாதனைகள், இணைந்து நடித்த கதாநாயகியர் பற்றிய செய்திகளும் தொகுக்கப்பட்டுள்ளன.
பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மீது கொண்டிருந்த அன்பு மற்றும் சிவாஜி பற்றி எதிர்மறையாக எழுப்பப்பட்ட விமர்சனங்களும் பதிவிடப்பட்டுள்ளன. நடிகர் சிவாஜி பற்றி ஆய்வு செய்பவர்களுக்கு பயன் தரும் நுால்.
–
புலவர் சு. மதியழகன்