திருப்புகழில் ஆழ்ந்து தோய்ந்து, முருக அமிர்தத்தைப் பருகியுள்ள வள்ளிமலை ஸ்ரீ சச்சிதாநந்த சுவாமிகளின் சரிதத்தை படிப்பவர்கள் அவர் போன்றே அனுபூதி அடைவர் என இந்தப் புத்தகம் நிரூபிக்கிறது.
சுவாமிகள் பழநி திருத்தலத்தில் பெற்ற முருகனின் பேரருள், அவரை வட மாநிலங்களுக்கு அழைத்துச் சென்று, அருள் பெற்றிட வழிநடத்தியதை உணர்வு பூர்வமாக விவரிக்கிறார்.
சுவாமிகளின் அருஞ்சேவையைப் பாராட்டும் வகையில், தெய்வீக குருவான வள்ளித் தாயே இருமுறை சிறுமி வடிவில் வந்து தரிசனம் அளித்திருக்கிறாள். ஒவ்வொரு அனுபவத்தையும் திருப்புகழ் பாடலுடன் இணைத்து விவரித்து உள்ளது.
‘தாள ஸ்வரூபத்திற்கும், தாள தத்துவத்திற்கும் திருப்புகழ் ஓர் ஒப்பற்ற உதாரணம்’ என்பதை, ராக, தாள நுணுக்கங்களோடு ஓர் இசைப் பயிற்சியாகவே திருப்புகழை கற்பித்து நிரூபித்திருக்கிறார். சுவாமிகளின் அனுபவங்கள் ஒவ்வொன்றும் முருகப் பெருமானின் கருணையில் நிலை நிறுத்துகிறது. வள்ளிமலை சுவாமிகள் தொகுத்தருளிய பாராயண குண்டு முதலான பகுதிகளை முத்தாய்ப்பாக இணைத்திருப்பது பாராட்டுக்குரியது.
–
பிரபு சங்கர்