துாய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ள நாவல். லோகையா மேஸ்திரி தெரு என்ற பகுதியில் வாழுவோர் திருச்சி நகரில் செய்யும் பணியை விவரிக்கிறது.
குப்பையில் கிடக்கும் பொருட்களை கம்பியால் எடுத்து, கோணிப் பையில் போட்டு அதை விற்று வாழ்க்கையை நடத்தி வரும் பெண்ணுக்கும், நகராட்சியில் துப்புரவு பணிபுரிபவருக்கும் ஏற்படும் காதலை மையமாக கொண்டு கதை துவங்குகிறது.
இந்தப் பணியை செய்தவர், படிப்பு தகுதியில் வேலை கேட்டாலும் அடையாளம் கண்டு, கழிப்பறை துாய்மை பணியை மட்டுமே கொடுக்கும் அநீதியை காட்டுகிறது. இரும்பு வியாபாரிகள் கடையில் ஏதாவது காணாமல் போய்விட்டால் குப்பை பொறுக்கி சம்பாதிப்பவர் மீது புகார் செய்வதையும், அதனால் பெண்கள் படும் கஷ்டத்தையும் தெளிவுபடுத்துகிறது.
கடமையை ஒழுங்காகச் செய்பவருக்கு ஏற்படும் அவமானத்தால் தவறும் நிலையை வெளிப்படுத்துகிறது. பின்தங்கியுள்ள மக்கள் அவலத்தை எடுத்துக் கூறும் நாவல்.
– முகிலை ராசபாண்டியன்