கிராமத்து வாழ்வை காட்சி மயமாக சித்தரிக்கும் உயிர் துடிப்புள்ள நாவல். உள்ளூர் அரசியல்வாதியின் செயல்பாட்டை எளிய மொழி நடையில் விவரிக்கிறது. இந்தியாவில் மக்களாட்சி ஏற்பட்ட பின், தமிழகத்தில் குறிப்பாக கிராமப்புற மக்களிடம் உருவாகியுள்ள மனச்சித்திரத்தை பதிவு செய்கிறது கதைக்களம். பிரதான பாத்திரம் ஒரு அரசியல்வாதி. அதை, மையப்படுத்தி, பாத்திரங்களை காட்சிப்படுத்தி தனித்துவமாக கதை சொல்லப்பட்டுள்ளது.
கிராம வாழ்வின் அவலம், போதாமை, இயலாமையை தெளிவாக காட்டும் வகையில் நுட்பமான விவரிப்பு உள்ளது. அடிமட்டத்தில் மாற்றத்துக்கான தேவையை உணர்த்துகிறது. நெல்லை வட்டார சொற்களை சிக்கனமாக பயன்படுத்தி, களத்தின் இயல்பை கண்முன் நிறுத்துகிறது.
இனிய இசையை பொருத்தமான காட்சியுடன் பார்ப்பது போல், இந்த நாவல் வாசிப்பு இனிய அனுபவத்தை தருகிறது. இந்தியாவில் பிற மொழிகளில் போற்றப்படும் படைப்புகளை ஈடு செய்யும் வகையில் உள்ளது. வாசிப்பை மேம்படுத்தும் நுால்.
–
மலர்