ஏழு வெவ்வேறு களங்களில் எழுதப்பட்ட குறு நாவல்களின் தொகுப்பு நுால். அன்றாட வாழ்வில் சந்திக்கும் மாந்தர்களின் குணாதிசயங்கள், எதிர்கொள்ளும் பிரச்னைகள், கொண்டாட்டங்களை உள்வாங்கும் வகையில் எளிய நடையில் உள்ளன.
ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆதிசேஷன், அண்டை வீட்டாரின் யோசனையை ஏற்று, அடுக்குமாடி குடியிருப்பில் மளிகை வணிகத்தில் இறங்குகிறார்.
இதற்காக ஊர் ஊராகச் சுற்றி ஈர நெல்லை வாங்கி, அரைத்து அரிசியாக்குவது, சொத்தை வத்தல், கறுத்த புளியை வாங்கி வீட்டின் படுக்கையறையில் அடுக்குவது, பொருட்களை பொட்டலம் போட அலைவது, பல சரக்கு பொருட்களால் வீட்டுக்குள் வந்த எலிகளை விரட்ட, பூனை வாங்க திட்டமிடுவது என, ‘மொத்த வியாபாரம்’ கதை நகைச்சுவை சரவெடி.
ஒவ்வொரு கதையிலும் வித்தியாச அனுபவங்களை பகிர்வது, படைப்பின் இடையிடையே தலைகாட்டி அறிவுறுத்தல் அளிப்பது போன்றவை சிரிப்பு மூட்டுகிறது.
–
சையத் அலி