தகப்பன் ஆசையை நிறைவேற்ற வாழ்க்கையை தியாகம் செய்த பீஷ்மரின் பண்புகளை விளக்கும் நுால். நடையில் அற்புத அனுபவங்கள் அணி வகுக்கின்றன. ஆறு தலைமுறைகளோடு வாழ்ந்தவர். வாழவும் வைத்தவர்.
பேரப் பிள்ளைகள் அன்புடன் அமைத்த அம்புப் படுக்கையில் தான் மரணித்தார். எட்டு வசுக்களில் ஏழு பேர் மறைய, பீஷ்மர் எட்டாவதாய் உயிர் தப்பியதை சுவைபட எழுதியுள்ளார். காங்கேயன், தேவவிரதன் ஆன பீஷ்மர், பரசுராமருடன் 25 நாள் போர் செய்து ஓட விட்டார். சிகண்டி என்ற திருநங்கையை முன்னிறுத்தி அருச்சுனன் கொன்று விடுகிறான்.
விரும்பும் நேரத்தில், விருப்பப்படி உயிரை விடும் வரம் பெற்ற பீஷ்மர் முடிவு வேறு யாருக்கும் வாய்க்காத பேறு. போர் முடிந்து பாண்டவர் வெற்றி பெற்ற செய்தியை கேட்ட பிறகே இறந்தார். பிறர் வாழவே வாழ்ந்து வரலாறாகிய பீஷ்மரை போற்றும் வாசமிகு நுால்.
–
முனைவர் மா.கி.ரமணன்