தாமிரபரணி குறித்து பேசப்படும் புராண வரலாறுகள், நடந்த சம்பவங்கள், தாமிரபரணியின் துணை நதியான சிற்றாறு, கடனாநதி, மணிமுத்தாறு நதி ஆகியவை குறித்து நன்கு விளக்கும் நூல். முத்தாலங்குறிச்சி காமராசு இதை வெறும் ஆவணங்கள் அடிப்படையில் எழுதாமல் தானே நேரில் பொதிகை மலையை நோக்கி கடுமையான நடைபயணம் மேற்கொண்டு அனுபவ ரீதியாக எழுதியுளார்.
தென்றல் தோன்றும் இடம், 15 கிலோ மீட்டர் சூரிய ஒளியே படாமல் ஓடிவரும் தாமிரபரணி, தாமிரபரணியை காப்பாற்றிய ஆங்கிலேய அதிகாரிகள், மாஞ்சோலை எஸ்டேட் 99 வருட குத்தகைக்கு சென்ற விதம், மணிமுத்தாறு தலையருவி மற்றும் சிற்றாறு தோன்றும் குற்றாலம் மலையில் மழை வேண்டி நடக்கும் அற்புதபூஜைகள், மஞ்சள் நிறத்தில் விழும் அற்புத அருவி, பன்னீர் மழை பொழியும் அதிசய மரம், சந்தன மழை, 100 ஆண்டுகளுக்குமேல் நவீன வசதி ஏதுமின்றி வசிக்கும் காணிகள், உயிர்பலியை ஏற்படுத்தும் அருவிகள், பெருவிரல் பட்டாலே ஆளை விழுங்கும் அகத்தியர் அருவி அருகில் உள்ள தெப்பம், அதல பாதாளத்தில் தள்ளும் பாணதீர்த்தம், சிற்றாற்றில் குற்றால மலையில் உள்ள பொங்குமாம் கடல், மணிமுழுங்கி மரமம், காணி இன மக்கள் திருவிழாவும் சடங்குகளும், 100 வருடங்களை கடந்தும் நிமிர்ந்து நிற்கும் மரப்பாலம் போன்றவற்றை ஆசிரியர் விவரித்திருக்கும் அழகு மிகவும் சிறப்பானது. தாமிரபரணி மற்றும் பொதிகை மலை குறித்து இதுவரை பலரும் அறியாத பல தகவல்களை உள்ளடக்கியுள்ளது இந்த நூல்.
–
இளங்கோவன்