சமஸ்கிருதத்தில் அமைந்த ஸ்ரீமத் பகவத் கீதையை புரிந்து, வாழ்க்கையில் பின்பற்றும் நோக்கில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள நுால். குருஷேத்திர போரில் அர்ஜுனன் எழுப்பிய ஐயங்களுக்கு, கிருஷ்ண பரமாத்மா வழங்கிய பதிலுரை பகவத் கீதை, அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் அமைந்துள்ளது. தத்துவங்களாக விளங்குவதோடு வாழ்வில் பின்பற்றும் வழிகாட்டியாகவும் திகழ்கிறது.
‘சத்துவம், ரஜோ, தமோ’ என்ற குணங்கள் பற்றியும், நான்கு வகை பக்தர்களின் பண்பு நலன்கள் பற்றியும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு எனவும், தன்னலமில்லா செயல்களே மேலான சக்தியை அளிக்கும் எனவும் கீதையின் சாராம்சங்கள் வாழ்வோடு ஒத்திலங்குவதை விளக்குகிறது.
சமஸ்கிருத சொற்களுக்கு ஆங்கிலத்தில் பொருளுரைக்கப்பட்டுள்ள பட்டியல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மானுடம் தழைக்க வழிகாட்டும் நுால்.
– புலவர் சு.மதியழகன்