கருத்தைக் கதையோடு சொல்லி விளங்க வைப்பது என்பது குழந்தைப் பருவப் பயிற்சி. ஆனால், அது எந்த வயதுக்கும் பொருந்தும் என்பது தான் யதார்த்தம். அந்த உத்தியை வெகு சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் புத்தக ஆசிரியர்.
திருமுறைப் பாடல்கள் சுருக்கமாகச் சொன்னவற்றை சுவையாக விளக்கிய பாங்கு புத்தகத்தின் 30 அத்தியாயங்களிலும் விரவிப் பரவியுள்ளது. நயங்களுக்குப் பஞ்சமில்லை. கந்தர் அலங்காரம், திருமந்திரம், சிவராத்திரி புராணம், அபிராமி அந்தாதி, பட்டினத்தார் பாடல் என்று மேற்கோள்கள் காட்டி, புலமையை திறம்பட வெளிப்படுத்துகிறார்.
சிவ தலங்களுக்கு அழைத்துச் சென்று பரவசப்படுத்துகிறார். ‘கனிக்கும், கரும்புக்கும் எட்டா இனியவன்’ என்பன போன்ற அத்தியாய தலைப்புகள், புத்தகத்தைக் கீழே வைக்க விடாமல், கவனத்தைத் திசை திருப்ப விடாமல் செய்கின்றன. படித்து அனுபவித்தால் புரியும்.
–
பிரபு சங்கர்