முருகப்பெருமான் வரலாற்றை, வியாசர் துவங்கி இன்று வரை எத்தனையோ பேர் எழுதி விட்டனர். அனைத்துமே, தித்திக்கும் தேனாகவே உள்ளன. தமிழ்க்கடவுள் என்று சிறப்பு பெயர் பெற்ற எம்பெருமான் முருகனின் சரிதத்தை எளிய நடையில் தருகிறது இந்த நுால்.
முருகனின் பிறப்புக்கு முன், பார்வதிதேவி தவமிருந்ததில் இருந்தே, தன் கவனத்தை செலுத்தியுள்ளார். குமரன் உதித்தார் என்ற தலைப்பில், முருகப்பெருமானின் பிறப்பு குறித்து அவர் எழுதியுள்ள விதம், மற்றவர்களிலிருந்து அவரை வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.
அமோகன் என்ற மந்திரியைப் பற்றியும், அவன் சூரபத்மனுக்கு அறிவுரை கூறியது பற்றியும் சொல்லியுள்ளது குறிப்பிடத்தக்கது. படிப்படியாகத்தான் முன்னேற வேண்டும், ஒரேயடியாக கடைசிப்படியில் கால் வைக்க நினைப்பது, சரிவுக்கு வழி வகுக்கும் என அவன் சூரபத்மனுக்கு கூறிய அறிவுரை, நம் எல்லோருக்கும் ஒரு படிப்பினையாகும். அவன் அசுர குலத்தவனாயினும், எக்குலத்தாருக்கும் பொருந்தும் வகையில் சொன்ன அறிவுரையை, ஆசிரியர் இந்த இடத்தில் கையாண்டிருப்பது பாராட்டுதலுக்குரியது.
பானு என்றால் சூரியன் என்பதை பலரும் அறிவர். சூரபத்மனின் பிள்ளையான பானுகோபனுக்கு அந்தப்பெயர் எப்படி வந்தது, தொட்டிலில் படுத்திருந்த குழந்தை சூரியனையே பிடித்து வந்தது என்பது உள்ளிட்ட தகவல்கள், இனி என்ன நடக்கப் போகிறது என அறியும் ஆவலைத் துாண்டுகிறது.
தேவர் – அசுரர் போர், சேனைத்தலைவர் வீரபாகுவின் வீரச் செயல்கள், அமைச்சர் தருமகோபன் சூரபத்மனுக்கு சொன்ன ஆறுதல் என பலதரப்பட்ட தகவல்களுடன் கதை நகர்கிறது. போர்க்களமாக இருந்த கதை, கடைசியில் திருக்கல்யாணத்தில் வந்து நிறைவுற்றது. மங்கள நினைவுகளுடன், புத்தகத்தை விட்டு நகர முடிகிறது.
மொத்தத்தில், முருகப்பெருமானின் கதையை எளிய நடையில் தந்துள்ள நுாலாசிரியரை பாராட்ட வேண்டும். அனைவரின் பூஜை அறையிலும், இந்தப் புத்தகம் தவழட்டும்.
–
தி.செல்லப்பா