புற்றுநோயால் அவதிப்பட்ட பெண், அபிராமி அந்தாதி பாடல்களைக் கேட்க விரும்பியதாகவும், பச்சைப் புடவைக்காரி அந்த கோரிக்கையை கதைகளாக எழுத வைத்து நிறைவேற்றியதாகவும் ஆசிரியரே குறிப்பிடும் நுால். சம்பவங்களின் தொகுப்பு போல் தெரிந்தாலும், பின்னணியில் உள்ள ஆன்மிகத் தகவல்களை புறந்தள்ளி விடக்கூடாது.
அபிராமி அந்தாதியின் சில பாடல்களை தேர்வு செய்து விளக்கத்தை வெறுமனே கூறாமல், கதை போல ஒரு சம்பவத்தை விவரித்திருக்கும் பாங்கு மிக அருமை. பாடல் மனதில் பதிகிறதோ இல்லையோ, உதாரண சம்பவம் மனதை விட்டு அகலாது.
புத்தகத்தில் உள்ள தேன் துளிகள்...
* மரணம் என்பது கர்ம பலன்படி நிகழக்கூடியது; ஆனால், அதை உயிரைக் கொடுத்து தடுக்க நினைப்பது முட்டாள்தனம்
* செய்வினை செய்யற வினை தான். அதற்குப் பரிகாரம் அபிராமி அந்தாதி தான்
* அன்னையின் அருள் வேண்டி தவம் செய்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன... நான் சரணடைந்துவிட்டேன்
* என்னைக் காப்பதோ, அடையாளம் தெரியாமல் அழிப்பதோ, சொர்க்கத்தில் வாழ வைப்பதோ, நரகத்தில் வேக வைப்பதோ உன் திருவுள்ளம் தாயே
* கிருஷ்ணா நீ என்ன விரும்புகிறாயோ அதே நடக்கட்டும். இந்தப் பூமியிலும் சரி, சொர்க்கத்திலும் சரி, நரகத்திலும் சரி எல்லாம் உன் விருப்பப்படியே நடக்கும். இறைவா உன் விருப்பமே என் விருப்பம்
* தீய மனிதர்களைப் பார்த்தால் வெறுப்பது என்பது தன்னிச்சையாக இருக்கும் குணம். தீமையை நோயாகப் பார்ப்பது தான் உச்சகட்ட ஆன்மிக வளர்ச்சி
* ஆன்மிகம் என்பது நம்மைவிட பெரிய சக்தி இருப்பதை நம்புவது. அது நம்மைக் காக்க, நாம் யாரையும் காயப்படுத்தக்கூடாது என்று புரிந்து கொள்வது. துன்பம் வேண்டவே வேண்டாம் என்றால், அடுத்தவருக்கு துன்பம் செய்யாமல் இருப்பது.
அபிராமி அந்தாதியைப் பிழிந்து சாரத்தை பருக கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.
– இளங்கோவன்