தமிழகத்தின் இரும்புப் பெண்மணியாகத் திகழ்ந்த ஜெயலலிதா எழுதிய வாழ்க்கை அனுபவ சுயசரிதை நுால். பள்ளிப் பருவம், சினிமாவில் முதல் அனுபவம், மாறுபட்ட சூழ்நிலைகளில் நடித்தது, குழந்தைத்தனமாக இருந்தது போன்ற சுவையான நிகழ்வுகளை குறிப்பிட்டுள்ளார்.
மனம் திறந்து வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்து சொல்ல நினைத்தாலும், வெளிப்படையாக சில சம்பவங்களை சொல்வது சிலருக்குப் பிடிக்கவில்லை. இதனால், இந்த தொடரைப் பாதியிலேயே நிறுத்த நேர்ந்திருக்கிறது.
படிக்கும்போது ஜெயலலிதா பேசுவது போல் உள்ளது. அதற்கு முழு காரணம் ஆசிரியர் ரஜத் என்றால் மிகையாகாது. ஜெயலலிதாவின் நினைவலைகளில் சில...
* தாத்தாவிடமிருந்து பெற்ற கட்டுப்பாடு, பூரணத்துவம்; தந்தையிடம் கண்ட கட்டுப்பாடின்மை, ஊதாரித்தனம்
* நான் ரொம்ப யோக்கியமானவள், நல்லவள், யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யலை. ரொம்ப புண்ணியவதின்னு எல்லாம் சொல்லிக்க மாட்டேன். நான் நானாக இருக்கிறேன். அவ்வளவு தான்
* வாழ்வில் நடந்ததை உள்ளதை உள்ளபடி பகிர்ந்து கொள்கிறேன். அதைப் படித்துவிட்டு என்னை பற்றி நீங்கள் முடிவு செய்யுங்கள். இல்லாததைக் கற்பிச்சு சொல்ல மாட்டேன். நான் சொல்றதெல்லாம் உண்மை தான்.
* நான் ஒரே துணிப் பைத்தியம். ஒரு தடவை போட்டுக் கொண்டால் இனிமேல் அது பழசு, வேண்டாம் என்கிற எண்ணம் கொண்டவள்
* சின்ன வயசிலேயிருந்து நல்லத்தனமாகச் சொல்லி, தாஜா பண்ணினால் எது வேணுமானாலும் செய்வேன். அதட்டி, அதிகாரம் பண்ணி ஏதாவது சொன்னால் அப்படியே ‘ப்ளோ அப்’ ஆகி விடுவேன்
* பிஎச்.டி., படிக்கிறது, லாயராகிறது கனவாக இருந்தாலும், சினிமாவில் சேருவதாக எடுத்த முடிவு பற்றி என்னிக்குமே நான் வருந்தியது கிடையாது.
இப்படி சுவாரசியங்கள் நிறைந்துள்ள நுால்.
– இளங்கோவன்