ராமாயண மகா காவியத்தில் அயோத்தியின் அழகு, வளமை துவங்கி, பால பருவத்தில் ராமபிரான் செய்த அற்புதமான விளையாடல்களையும், தம்பிகளுடன் ஒற்றுமையாய் வாழ்ந்ததையும் அழகாகச் சொல்லியுள்ள நுால். அயோத்தியின் வளம் பற்றி பேசும் ஓரிடத்தில், காய்கறி நறுக்கும் அழகைப் பற்றி ரசனையாக எழுதப்பட்டுள்ளது.
கோசலை, கைகேயி, சுமித்திரை என்ற பட்டத்தரசியர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற குழப்பத்திற்கு, வால்மீகியோ, கம்பனோ சரிவர பதில் சொல்லாத நிலையில், காளிதாசனை துணைக்கு அழைத்திருக்கிறார்.
அவரது ரகு வம்சத்தில் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது பற்றி தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
இது போன்ற புதிய தகவல்களெல்லாம் படிக்கும் ஆர்வத்தை துாண்டுகிறது. சீதா கல்யாண வைபோகமே என்று பாடக் கேட்டிருப்பீர்கள். ராமனுடன் சீதைக்கு திருமணம் நடக்க, உண்மையின் உறைவிடமான அரிச்சந்திரன் காரணமாக இருந்தான் என்ற தகவல் கூறப்பட்டுள்ளது.
‘இதென்ன புதுக்கதை. இதை கம்பனிலோ, வால்மீகியிலோ படித்ததில்லையே...’ என்பவர்கள் விடையை இந்த புத்தகத்தில் தெரிந்து கொள்ளலாம்.
‘ஐயோ... பக்கம் எண் சொல்லியிருக்கக் கூடாதா... உடனே திருப்பிப் பார்த்திருப்பேனே...’ என்பவர்கள் அமைதியாய் முதலிலிருந்து படியுங்கள்; பல தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
ராமன் திருமணத்திற்கு பட்டத்தரசியர் மூவரும் சிவிகையில் சென்றனர் இல்லையா... இதில் பெற்றவள் கோசலையின் சிவிகை முன்னால் செல்லாமல், கைகேயியின் சிவிகை முன்னால் சென்றதாம். இதற்கு என்ன காரணம் படித்தால் விரியும்.
வித்தியாசமான தகவல்களை உள்ளடக்கிய நுால்.
– தி.செல்லப்பா