குறும்பு மிக்க காதலை மையமாக கொண்டு படைக்கப்பட்டுள்ள நாவல். விறுவிறுப்பு மாறாமல் பின்னப்பட்டுள்ளது. காதல் என்பது என்ன, அதற்கு உகந்த வயது, யாருக்கு யார் மேல் காதல் வருகிறது, எப்படி வருகிறது, எந்தரூபத்தில், எந்த தருணத்தில் என்பது போன்ற கேள்விகளுக்கு சுவாரசிய பதில் தருகிறது.
காதல் எப்போது எப்படி உள்ளே புகுகிறது என்று சொல்லவே முடியாது. மனதைக் கெடுப்பது கண். அது பார்க்கிறது. அழகு! வனப்பு என்று ஜொள் விடுகிறது. மூளைக்குத் தகவல் கொடுக்கிறது. நெஞ்சையும் துணை சேர்த்துக் கொள்கிறது.
அதோ பார்க்கிறாள். சிரிக்கிறாள்... நம்மைப் பார்த்துதானா? நம்மையும் பிடித்து விட்டதா? விடாதே! இன்னும் பார். கண்களை வெட்டு. மின்சாரம் பாய்ச்சு!
அவளுக்குப் பிடித்தது எல்லாம் பிடிக்கிறது. பிடிக்காவிட்டால்கூட, பிடித்ததுபோல நடிக்கத் தோன்றுகிறது. பஸ்சில் போகிறாளா... சினிமாவுக்கா... நாமும் போகலாம். எல்லாமே போலி, நடிப்பு, ஏமாற்று வித்தை போல இருக்கும்.
காதல் என்பது புகை. ஊதினால் ஒதுங்கி விடும். ஆனால், எவரும் ஊத முனைவதில்லை. அதன் சுகந்தத்தில் மயங்கி விடுகின்றனர். ஆசிரியை தொழில் தெய்வீகமானது.
படிப்பிப்பதோடு பிள்ளைகள் சுபாவம் அறிந்து செயல்பட வேண்டும். இதம் பார்த்து பதமாய்க் கண்டிக்க வேண்டும்.
போலீஸ்காரர்களுக்கு ஜாதி மத வேறுபாடு கிடையாது. மொழி, மாநிலம், நாடு என எந்த வித்தியாசமும் இல்லை. நேர்கோட்டிலேயே சஞ்சரிக்கிறார்கள். அந்தக் கோட்டிற்கு பெயர் தந்திரம். கிடைத்த வரை சுருட்டு, எளியவரை அடி, உதை. வலியோருக்கு வணங்கு; சலாமிடு. அப்போதுதான் முன்னேறலாம்.
இவ்வாறு காதல், இளவயது மனப்பான்மை, ஆசிரியர் மற்றும் போலீசாரின் மனப்போக்கை தனக்கே உரிய நடையில் சுவைபட தரும் நாவல்.
– ரவி