மனதின் எண்ணங்களை ஒரு தலைப்பிற்குள், ஒரு பக்க அளவிலான கட்டுரையாக மொத்தம், 106 கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது இந்நுால். கவிதைத்துவமான நடை, மனதின் கேள்விகளும் விடைகளும் அழகான மழைச்சாரலாய் -அடுக்கடுக்காக குவிந்து மணம் பரப்புகின்றன.
படைப்பு சூட்சுமத்தை விளக்கும் ஒரு தலைப்பு யாரும் ஜெயிப்பதில்லை. அது, பிள்ளைப் பருவ விளையாட்டில் யார் ஜெயித்தால் என்ன? மகிழ்ச்சி அனைவருக்கும் பொது தானே? இன்றோ பழைய மகிழ்ச்சியை தொலைத்துவிட்டு தேடிக்கொண்டு இருக்கின்றனர். இது கோடு தாண்டிய விளையாட்டு.
இதில் யாரும் ஜெயிப்பதில்லை. ஏன்? ‘எங்குமே தருணம் தங்க முடியாது’ என்றவாறு மனச் சிந்தைகளை கிளறிச் செல்கிறது. இவ்வாறு ஒவ்வொன்றும் ஒரு புரிதலாய், தத்துவமாய், அனுபவச் சிதறலாய் ஆங்காங்கே வெளிப்பட்டு சுவையூட்டும் அழகிய படைப்பு.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்