அன்பு காட்டும் வழிகளை பட்டியலிடுவதை தாண்டி, அன்பே வழி என்பதை ஆணித்தரமாக உணர்த்தும் நுால்.
பிரச்னைகளுக்கும் அடிப்படையாக இருப்பது அன்பின்மை. அதற்கான தீர்வுகள் பல இருந்தாலும், வேராக இருப்பது அன்பு தான் என சுட்டிக்காட்டுகிறது.
நமக்கென்று கேட்பதைக் காட்டிலும் பிறருக்காகத் தருவது, பிரார்த்தனைகளின் சாரமாக இருக்க வேண்டும் என்பது வெளிப்படுகிறது.
வாழ்க்கை என்பது நாம் தேர்ந்தெடுப்பது தான் என்றாலும், இயல்புக்கு மாறான செயலில் வழி தவற இருந்த இளைஞனைக் காப்பாற்றி, பெயரையும் புகழையும் தரும் இறைவியின் கருணையில் வாசகர் மனம் உருகாமல் இருக்காது.
நடிகை, நடிகன், தொழிலதிபர் என்று பணமும் புகழும் இருந்தாலும், மன நிறைவு அன்பிலே அடங்கியுள்ளது என்ற பாடத்தை முன்னிறுத்துகிறது. மனிதர்கள் செய்யும் செயல்களை அசை போட்டால் துன்பங்களுக்கான காரணம், அதற்கான பரிகாரத்தை அறிந்துக் கொள்ள முடியும் என்பதை எடுத்துக்காட்டுகள் கொண்டு விளக்கப்பட்டு உள்ளது.
சக மனிதர்களை காயப்படுத்தி விட்டு, காளியின் பாதங்களில் அபிஷேகம் செய்வது பக்தி அல்ல என்ற உண்மையையும், செய்த பாவங்களை எண்ணி வருந்தி அதைச் சரி செய்ய முயல்வதே சிறந்த பரிகாரம் என்ற தெளிவையும் வழங்குகிறது.
ஒருவருக்கு கேட்டதற்கு மேலாக கொடுப்பது ஒரு புறம் என்றால், மற்றொருவருக்கு கேட்டதை மறுத்து, ஏற்றதை கொடுத்து அருள் புரியும் இறைவியின் அன்பில் உள்ள நுட்பம் சிலிர்க்கச் செய்யும்.
இந்த நுாலில், 52 அத்தியாயங்களும் ஐயங்களை விலக்கி மனதை கனியச் செய்யும். ஆன்மிக பயணத்தில் தடைக்கற்களை அகற்றி, இறைவியின் மீதான பற்றுதலை இன்னும் உறுதியாக்கும் விதத்தில் அமைந்துள்ளது. அனைவரும் சுவைக்க வேண்டிய அமுதம்.
– தி.க.நேத்ரா