நுாலில் ஒரு சந்தேகத்தைக் கிளப்பி துவங்கியிருக்கிறார் நுாலாசிரியர் வா.ஜானகிராமன். தசரதர் பதவியை விட்டு விலகி, ராமனுக்கு முடிசூட்டப் போகிறார் என்றதும், ‘ஐயையோ! ஏன் இந்த அவசர முடிவு, ஆட்சி சிறப்பாகத்தானே இருக்கிறது...’ என்று, ஒரு மந்திரி கூட கேட்கவில்லையாம்.
மரியாதைக்காகவேனும் ஒருவர், ‘நீங்களே பதவியில் தொடருங்களேன்...’ என்று சொல்லியிருக்கலாம் என்பதே ஆதங்கம்.
இதில் உள்ள கருத்து என்னவென்றால், ‘ராம’ என்ற மந்திரம் எல்லார் கண்ணையும் மறைத்து விட்டது. ராமனாக வந்திருப்பவர் மகாவிஷ்ணு. அவர் எவ்வளவு பெரிய மாயாவி என்பது எல்லாருக்கும் தெரியும்.
ஒருவேளை, தசரதர் மனம் மாறி பதவியில் தொடர்வதாக இருந்தால், அவரது பிறப்புக்கே அர்த்தமில்லாமல் போயிருக்கும். ராமாவதாரத்தின் நோக்கமே காட்டில் வசிக்கும் ரிஷிகளைத் தரிசித்து ஆசி பெறுவது தான்.
பகவானை விட பக்தனே பெரியவன் என்ற உண்மையை, உலகுக்கு எடுத்துக்காட்ட வந்த அவதாரம் நிறைவேறியாக வேண்டும்.
ராமன் பிரிவைத் தாங்காமல் அயோத்தி மக்கள் மட்டுமல்ல... கிளிகள், பூனைகள் உள்ளிட்ட பறவைகளும், விலங்குகளும் கூட கண் கலங்கியதாக குறிப்பிட்டுள்ள இடம் கண் கலங்க வைக்கிறது. எல்லா உயிர்களும் கடவுள் முன் சமம் என்ற தத்துவமும் இனம்புரியா உணர்வை ஏற்படுத்துகிறது.
ராமனின் தாய் கவுசல்யா, பரதனிடம், ‘அப்பா! உன் தாய் உனக்காக இந்த நாட்டை பெற்றுத் தந்திருக்கிறாள். அந்த நாட்டில் நான் இருக்கலாமா...’ என மனம் வெதும்பி கேட்டதும் உடைந்து போன பரதன், ‘நாற்பது வகை பாவங்களை என் தாய் அடையட்டும்...’ என்று வரிசைப்படுத்துகிறான்.
பிறர் பொருளை அனுபவிக்க நினைப்போருக்கு இந்த ஆவேச உரையாடல் படிப்பினையாக இருக்கும். இந்த நுால், கண்ணில் இருக்கும் கடைசி துளி கண்ணீரையும் வடிய வைத்து விடுகிறது என்றால், அது மிகையல்ல. உணர்ச்சிப்பூர்வமாக எழுதப்பட்டுள்ள நுால்.
– தி.செல்லப்பா