வாழ்க்கையில் இனிப்பான சம்பவங்களை விட கசப்பான நிகழ்வுகளே அதிகம். ஆனாலும் என்ன செய்வது... வாழ்க்கையில் கசப்புகள் நேரும் போது, அவற்றை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் என்ற யதார்த்த நிலையை மனதில் கொண்டு, இந்த புத்தகத்தை இயற்றியுள்ளார் ஆசிரியர் ஜி.எஸ்.எஸ்.,
பெரியவர்கள், இளைஞர்கள் என பல தரப்பினருக்கும் பயன் தரும் வகையில் தீர்வுகளை புராணங்கள் வாயிலாக சொல்லியிருக்கிறார். இவர் வாழ்க்கை பிரச்னைகளுக்கான தீர்வுகளை, புராணத்தில் இருந்து எடுத்ததில் ஒரு மறைபொருளும் இருக்கிறது.
புராணம் என்றால் பழமையும், புதுமையும் கலந்தது என்பர். ஆம், பிரச்னைகள் யுகத்துக்கு தகுந்தவாறு புதிது புதிதாக முளைக்கும். அதை பழமையின் மூலம் தீர்த்து வைப்பது, ஒரு வகை மருத்துவம் என்று கூட சொல்லலாம்.
இது போன்ற கதைகளை அக்காலத்தில் தாத்தாக்கள் தங்கள் பேரன்களுக்கு எடுத்துச் சொன்னார்கள்.
இதை இன்றைய இளைய தலைமுறைக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இந்த நுால் எழுதப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.
குறிப்பாக, அலுவலக டென்ஷனை பொறுத்துக் கொள்ள முடியாத இளைஞர்கள் இக்காலத்தில் அதிகம்.
உயரதிகாரி ஒரு வார்த்தை சொல்லி விட்டால் போதும். அடுத்த நிமிடமே ராஜினாமா கடிதத்துடன் அவர் முன் போய் நிற்பர். இவரைப் போன்றவர்களுக்கெல்லாம் கசன் -தேவயானி காதல் கதை படிப்பினையாய் இருக்கும்.
இந்த புத்தகத்தை வாசித்தால் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள், பெரிய பாதிப்பை தரும் என்பதை உணர முடியும்.இளைஞர்களை சீர்படுத்த வந்த நன்னுால்.
– தி.செல்லப்பா