வேதம், யாகம் போன்றவை என்றென்றும் போற்றப்பட வேண்டும் என்பதை உலகுக்கு உணர்த்தவே ஆதி சங்கரரின் அவதாரம் நிகழ்ந்தது. அவர் சொன்ன பொன்மொழிகள் நிறைந்த நுால் இது.
* தேவை இல்லாத விஷயங்கள் மனதில் இருந்து மறைந்தாலே அமைதியும், ஆனந்தமும் உள்ளுக்குள் தாண்டவமாடும்
* நமக்குள் இருக்கும் வேண்டாத குணங்களைக் கழிப்பதை விட்டுவிட்டு, வெளியே இருக்கும் பல விஷயங்களில் தேவை இல்லாமல் கவனம் செலுத்தி, காலத்தை வீணாக்குகிறோம். வாழ்வின் யதார்த்தத்தை உணர வேண்டும்
* எது நிலையானது என்பதை அறிய வேண்டும்
* தொலைத்ததைத் தேடினால் தான் கிடைக்கும். ஆனால், எங்கே தொலைத்தோம்... எங்கே தேடுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். பொருளைத் தொலைத்த இடத்தில் தான் தேட வேண்டும்
* செய்கிற தவறுகளுக்கும், பிறரது மனதைப் புண்பட வைப்பதற்கும் காரணமாக அமைவது இந்த மனம் தான்! ஆக, தீர்வு என்பது நம் மனதுக்குள் தான் இருக்கிறது. எதுவாக இருந்தாலும் மனதை அறிந்து கொள்ள முயலுங்கள்
* மனிதர்களுக்குள் எந்த விதமான பேதமோ, உயர்வு தாழ்வோ இல்லை. பரப்பிரம்மத்தை உணர்ந்தவன் எந்தக் குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், போற்றுதலுக்குரிய ஆசார்யனாக விளங்குபவன் ஆகிறான். அவனே யோகி, அவனே பிரம்மம், வணங்கத்தக்கவன். பி.சுவாமிநாதன் எழுதியுள்ள, ‘ஆதி சங்கரர் வழியும் சொன்னார்... வாழ்ந்தும் காட்டினார்’ என்ற நுாலில், இது போன்ற ஆதிசங்கரரின் அருள்மொழிகள் கொட்டிக் கிடக்கின்றன.
ஒவ்வொருவரது பக்தியும் ஒவ்வொரு விதமாக இருக்கும். எனவே தான், ஆறு வகை நெறிகளை அறிமுகப்படுத்தி, ‘இவற்றில் எந்தக் கடவுள் உன் மனதை ஈர்க்கிறாரோ, அவரையே நீ வணங்கலாம்’ என்று அத்வைதத்தின் மூலம் ஹிந்து சமயத்தினருக்கு வழிகாட்டினார் ஆதி சங்கரர். அந்த வழிபாட்டு முறைகளே இன்றளவும் ஹிந்து சமயத்தைக் காத்து வருகின்றன.
– இளங்கோவன்