விஞ்ஞானமும் மெய்ஞானமும் தெய்வ பக்தியில் சங்கமிப்பதே ஆண்டாளின் திருப்பாவை என்பதை விளக்கும் நுால். ஒவ்வொரு பாசுரங்களின் பின்புலத்தில் இருக்கும் அறிவியல் உண்மைகளை கோடிட்டுக் காட்டி, தமிழரின் தொலைநோக்கு பார்வையை அறியச் செய்கிறது.
மழை, மேகம், பறவையினங்கள், மலர்கள், நதிகள் என இயற்கையின் அம்சங்களில் இறைவனைக் கண்டு வணங்கும் பக்தியின் எளிமையை சுட்டிக்காட்டுகிறது. தோழியரை ஆண்டாள் எழுப்பும் பாசுரங்களில் உள்ள நுட்பங்களை கண்டால் மனம் விழித்துக் கொள்ளும்.
வேதங்கள், கீதை உணர்த்தும் மேலான ஆன்மிக ஞானம் திருப்பாவையில் புதைந்துள்ளது என்பதை அறிய முடியும். இறை அவதாரத்தின் வரலாற்றை ஒற்றை வரியில் கூறிய சொல்லாட்சி சிறப்பு போற்றப்படுகிறது.
ஆண்டாளின் பக்திக்கும் எல்லையில்லாதது போல பாடிய பாசுரங்களின் அர்த்தங்களும் விரிவடைந்து ஆழமாகிறது என்ற கருத்தையும் முன்வைக்கிறது. சரணாகதி தத்துவமும், ஆண்டாளின் காதலும் அழகுத் தமிழில் சிலிர்ப்பு ஏற்படுத்துகிறது.
தமிழை ஆண்ட ஆண்டாளின் வரலாறு, அவரை வளர்த்த பெரியாழ்வார் வரலாறு என்பதையும் தாண்டி அறிந்திராத கதைகளையும் எடுத்துக் கூறுவது மற்றுமொரு சிறப்பம்சம்.
அடுத்ததாக, திருப்பாவையையும், திருவெம்பாவையையும் ஒப்பிட்டு, அதிலுள்ள ஒற்றுமைகளை கூறுவது புரிதலை மேம்படுத்துகிறது. தலைமைப் பண்பு, ஆளுமை ஆண்டாளிடம் நிறைந்துள்ளதாகக் கூறும் கருத்து, புதுமை கண்ணோட்டத்தை தரும் விதத்தில் உள்ளது.
இறுதியாக, ஆண்டாள் கோவில் சிற்பங்களையும், அவற்றின் சிறப்பம்சங்களையும் விளக்குவது மிகவும் மேலோங்கி இருக்கிறது. எழுத்தாளரின் இயல்பான வார்த்தைகளும், நுட்பமான தெளிவுரைகளும் அள்ளிப்பருக வேண்டிய அமுதமாக மாற்றியுள்ளது.
– தி.க.நேத்ரா