மகாகவி பாரதி, ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா...’ என்று, தாமிரபரணி நதியைப் பார்த்தபடியே தான் பாடியிருப்பாரோ... அவ்வாறு பாடியிருப்பதற்கு காரணம், இதன் கரையிலுள்ள திவ்யதேசங்கள் தானோ என எண்ண வைக்கிறது இந்த நுால்.
இந்த நதிக்கரையில், 108 திவ்யதேசங்களில் நவ திருப்பதி எனப்படும் ஒன்பது திவ்யதேசங்கள் உள்ளன. போதாக்குறைக்கு எண்ணெயால் புகழ் பெற்ற வானமாமலை என்ற நாங்குநேரி, பக்தனால் பெருமை பெற்ற திருக்குறுங்குடி ஆகிய புண்ணிய தலங்களின் வரலாறையும் இணைத்து எழுதப்பட்டுள்ளது.
பத்திரிகை துறையில் அனுபவம் மிக்க இந்த எழுத்தாளர், ஒவ்வொரு பதியைப் பற்றி எழுதியதோடு மட்டுமல்லாமல், அதற்குரிய பாசுரங்களையும், அதற்கு எளிய விளக்கமளித்துள்ளது, ஆன்மிக நெஞ்சங்களை அந்த பரந்தாமனின் அருள் உள்ளத்தோடு ஒன்றச் செய்து விடுகிறது.
தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில் வரலாற்றில் நம்மாழ்வார், ‘பிள்ளைக்குழா விளையாட்டு ஒலி’ அங்கே கேட்பதாகப் பாடுகிறார். பிள்ளைகள் விளையாடும் போது, மகிழ்ச்சியில் எழுப்பும் ஒலி, பெற்றவர்களின் காதுகளில் தேனாய் பாயும்.
அந்த குழந்தைகளின் ஒலியை, ‘விளையாட்டு இசை’ என மொழிபெயர்த்துள்ளார் ஆசிரியர். நம்மாழ்வார் இப்போது இருந்திருந்தால், ‘ஆம்... ஆம்... இந்த ஒலி நிச்சயமாக என் காதுகளில் இசையாய் ஒலிக்குமென்று எண்ணி தான் பாடினேன்’ என பிரபு சங்கரை மட்டுமல்ல; படித்த வாசகர்களிடமும் சொல்லியிருப்பார்.
இப்படி பல பாசுரங்களில், அருமையான எளிமையான மொழிபெயர்ப்பு. திவ்யதேசங்களைப் பற்றிய அருமையான தகவல் தொகுப்பு. இந்த நுால் உங்களிடம் இல்லையென்றால், இழப்பு உங்களுக்குத் தான்.
– தி.செல்லப்பா