கோவிலுக்குள் செல்கிறோம்... 10 ரூபாய் கீழே கிடக்கிறது. இதை நாமே வைத்துக் கொள்வதா... அல்லது உண்டியலில் போடுவதா என மனம் அலை பாயும்.
ஆனால், ரமண மகரிஷி என்ன செய்தார்... தன் கையிலிருந்த சில்லரைக் காசை வீசி எறிந்து விட்டு, தவத்தில் ஆழ்ந்து விட்டார். பூச்சிகள் அவரை கடித்துக் குதறின. ஆனால், தியானம் கலையவில்லை.
நம்மில் சிலரும் ‘மெடிடேஷன்’ என்ற பெயரில், பந்தாவுக்காக காலை வேளையில் கண்களை மூடிக்கொள்வர். மூளைக்குள் இறை சிந்தனை தவிர, ஆயிரம் எண்ண ஓட்டங்கள் ஓடிக் கொண்டிருக்கும். இதற்கெல்லாம் காரணம் என்ன? இதற்கு தீர்வு என்ன என்பதற்கான விடையும், இந்த ரமண பாகவதம் நுாலிலேயே சொல்லப்பட்டிருக்கிறது.
நான் யார்... இந்தக் கேள்வியை கேட்டுக் கொண்டே இருங்கள். ஒரு தாய், தந்தை என்னைப் பெற்றனர்; கட்டியவள் காப்பாற்றினாள்; பிள்ளைகள் உடனிருக்கின்றனர். நான் இன்ன தொழில் செய்து, கோடிகளைக் குவிக்கிறேன்... இப்படி பதில் நீண்டு கொண்டே போகும்.
இந்த பதிலைத் தாண்டி, உங்களைப் பற்றி நீங்களே விசாரணை செய்து பாருங்கள் என்பது தான், ரமண மகரிஷி தரும் அறிவுரை. எது நடக்க வேண்டுமோ, அது நடந்தே தீரும். எது நடக்கக்கூடாதோ, அது என்ன முயற்சித்தாலும் நடக்காது. இது, ரமணரின் அருள் வாக்கு.
ரமண மகரிஷியின் வாழ்க்கை வரலாறு, நிகழ்த்திய அதிசயங்கள், எல்லா உயிர்களையும் ஒன்றாகப் பார்த்தது என கருத்துக் களஞ்சியங்களை உள்ளடக்கியது இந்த நுால்.
ரமணரின் வாழ்வில் நடந்த அதிசயங்களை ஒன்று கூட விடாமல், 107 தலைப்புகளில் சொல்லியுள்ளார் ஆசிரியர். ரமணரின் அருள்மொழிகளையும் தொகுத்துள்ளார். ரமண பக்தர்கள் மட்டுமல்ல, நான் யார் என்பதற்கு விடை தேடிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவர் கையிலும் தவழ வேண்டிய புத்தகம்.
– தி.செல்லப்பா