வீட்டு வாசலில் முருங்கை மரம் வைக்கக் கூடாது ஏன்...
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அருந்துவது ஏன்...
தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது ஏன்...
இப்படி பல கேள்விகளுக்கு பதில் தரும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால்.
கோவில் கோபுரத்தை விட வீட்டின் கூரை உயரமாக இருக்கக் கூடாது.
துறவிகள் காவி உடை அணிவது ஏன்... வெளியூர்களுக்கு அசைவ உணவைக் கொண்டு செல்லும்போது கரித்துண்டு, இரும்புப் பொருட்களை உடன் எடுத்துச் செல்வது ஏன்...
கிழக்கில் தலை வைத்து படுக்கக் கூடாது ஏன்... போன்ற கேள்விகளுக்கும் பதில் உள்ளது.
ஆன்மிகம், அறிவியல், நம்பிக்கை சார்ந்த வினாக்களுக்கு விடையளிக்கிறது இந்த நுால். நம்பிக்கைகளின் அடிப்படையில் வளர்ந்த சமூகம் நம்முடையது.
அதே நேரத்தில் மூடநம்பிக்கைகளையும் அறுத்தெறிந்து இருக்கிறது. யாருக்கும் தீங்கில்லாத சில நம்பிக்கைகள் அழகானவை. திருஷ்டி சுற்றிப் போடுதல் அந்த வகையில் சேரும்.
திருஷ்டி சுற்றிப் போடுவதற்கான காரணம், இக்காலத்திற்கு ஏற்ற வகையில் சொல்லப்பட்டிருக்கிறது.
காக்கை கரைந்தால் விருந்தினர் வருவர் என்பது நம்பிக்கை. இந்நுாலில் காக்கை கரைவதற்கான வேறொரு காரணம் சொல்லப்பட்டிருக்கிறது. அதுமட்டுமா, ‘இரவில் தயிர் கடன் கொடுக்கலாமா...’ என்ற கேள்வியை எழுப்பி பதில் தருகிறது.
‘சாப்பிட்டு முடித்த பின் குளிக்கலாமா’ என்று கேட்பவர்களுக்கும், அறிவியல் சார்ந்த பதில் சொல்லப்பட்டிருக்கிறது. நம்பிக்கை, ஆன்மிகம், அறிவியல் கருத்துள்ள நுால்.
-– இளங்கோவன்