உரையாசிரியர்-பத்மதேவன்.வெளியீடு:கற்பகம் புத்தகாலயம், 4/2,சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர்,சென்னை-600 017.பக்கங்கள்:200.நீதிக் கருத்துக்களைக் கூறும் பாடல்களினூடே ஆங்காங்கே பலவகைச் சுவை ததும்பும் பாடல்களும் கலந்து மிளிருமாறு தொகுக்கப்பட்ட நூல்தான் விவேக சிந்தாமணி.இலக்கியங்கள் பலவற்றிலிருந்தும், தனிப்பாடல்களாக உலவியவற்றிலிருந்தும் சிறந்த பாடல்களாகத் தாம் கருதியவற்றைத் தேர்ந்தெடுத்துக் கதம்பமாக்கித் தந்திருக்கிறார் இதன் தொகுப்பாசிரியர். தொகுத்தவர் யாரென்றும், அவர் காலம் என்னவென்றும் இன்னும் திட்டவட்டமாகத் தெரியவில்லை. இந்நூல் நாயக்க மன்னர்கள் காலத்தில் உருப்பெற்றிருக்கலாம் என்பது ஒரு சாரார் ஆராய்ச்சியின் முடிவு.தொகுத்தவர், பாடல்களை எந்தவித வகுப்புக்கும் பகுப்புக்கும் உட்படுத்தாமலும்,எந்தவித வரன்முறையையும் பின்பற்றாமலும் வெறும் கலவையாகத் தந்திருக்கிறார்.அவ்வாறு தந்த பாடல்களில்,ஏறத்தாழ எல்லாப் பாடல்களும் சிந்தைக்கினியன;பொருள் தெரிதற்கெளியன.சில பாடல்களின் கருத்துகள் இந்தக் காலத்திற்கு ஒவ்வாதவையாகவும், ஏற்றுக்கொள்ள இயலாதனவாகவும் உள்ள போதிலும், அக்கருத்துகள் கச்சிதமாகச் சொல்லப்பட்டிருக்கும் விதத்திற்காக அப்பாடல்களைப் படித்துச் சுவைக்கலாம்.