ஆதி சங்கரரைத் தலைமை குருவாகக் கொண்ட ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதியாக இருந்தவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்கிற மகா பெரியவா. இவரை நடமாடும் தெய்வம், சர்வேஸ்வர சொரூபம் என்று பக்தர்கள் போற்றுகின்றனர்.
இன்றைக்கும் சரணாகதி அடையும் பக்தர்களுக்கு அருள் வழங்கிக் காத்து வருகிறார். இந்த அனுபவங்களை பக்தர்கள் பகிர்ந்து வருகின்றனர். அப்படிப்பட்ட நெகிழ வைக்கும் அனுபவங்களை மிக நேர்த்தியாகத் தொகுத்து எழுதி வருபவர் ஆன்மிக சொற்பொழிவாளரும், எழுத்தாளருமான பி.சுவாமிநாதன்.
இதுவரை, 12 தொகுதிகளாக வெளி வந்துள்ளன. அனைத்தும் வித்தியாசமானவை. ஒன்றில் இருப்பது இன்னொன்றில் இருக்காது. ஒன்றுக்கொன்று தொடர்ச்சி என்பதெல்லாம் இல்லை.
இந்த அனுபவங்களில் அரசியல் தலைவர்கள், ஆன்மிகப் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என்று பல தரப்பட்டவர்கள் உண்டு. இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக அவரை சரணாகதி அடைந்த பக்தகோடிகளின் பரவசப்பட வைக்கும் அனுபவங்கள் ஏராளம்!
‘பிழைக்கவே மாட்டார்’ என்று மருத்துவர்கள் நாள் குறித்த பக்தர்களை பிழைக்க வைத்தது, ‘எதற்கும் பயன்படாதவன்’ என்று சமூகம் ஒதுக்கியவர், இவரை சரணாகதி அடைந்ததும், புகழின் உச்சிக்கு் சென்றது...
பக்தி சிந்தனையே இல்லாமல் இருந்தவரை பக்தியின் பக்கம் திருப்பியது, ஏழையாக இருந்தவரை பொருளாதார உச்சிக்கு கொண்டு சென்றது- என மகா பெரியவா நிகழ்த்திய அதிசயங்களும், அற்புதங்களும் கணக்கிலடங்கா!
அந்த மகானின் அருமை புரிந்த பக்தர்கள் அவரை சரண் புகுந்து பலன் பெறுகின்றனர். காஞ்சியில் உறையும் காருண்ய தெய்வம் இன்றைக்கு உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. மகா பெரியவா பற்றிய, 12 தொகுதியாக வந்துள்ள 12 நுால்களையும் படியுங்கள். பரவசத்தை உணர்வீர்கள்.
– -இளங்கோவன்