வரலொட்டி எழுதியுள்ள, ‘தீக்குள் விரலை வைத்தால்...’ புத்தகத்தில், மாணிக்கவாசகரின் பூர்வ கதை மிகவும் சுவாரசியமாக முதலில் சொல்லப்படுகிறது. திருவாசகம் என்றால் இறைவனின் அருள் பெற்ற வாக்கியங்கள் என்று பொருள் என எழுதுகிறார். குறிஞ்சித் திணை, பாலைத் திணை ஒப்பீடு மிகவும் அருமை.
மாணிக்கவாசகர் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார் என்பதை அறிந்திருக்க மாட்டோம். அந்தப் பரிமாணத்தை வெளிக்கொணர்ந்துள்ளார். ஊர் நாயைப் பற்றி சொன்னது, நாங்கூழ் புழுவைப் பற்றி சொன்னதெல்லாம் ஆச்சரியமாக உள்ளன. திருவாசகத்தின் பல அத்தியாயங்களை முன்பே படித்திருந்தாலும் வரலொட்டி எடுத்துச் சொல்லும் வரை, இந்தப் பாடல்களின் உள்ளர்த்தம் நிச்சயமாக எல்லாரையும் சென்றடையாது.
‘எடை போடுவது, தீர்ப்பு சொல்வது என்று ஆரம்பித்தால் அன்பு காட்டவே நேரம் இல்லாமல் போய்விடும்’ என்ற வாக்கியம் பலம் வாய்ந்தது. காதலுக்கு மட்டுமல்லாமல் எல்லா உறவுகளுக்கும் இது பொருந்தும்.
‘குறையொன்றுமில்லை...’ என்ற பாடல் எழுதப்பட்ட சூழ்நிலை சிலிர்க்க வைக்கிறது. மறைந்த தலைவர் ராஜாஜியின் வாழ்க்கை நெஞ்சைப் பிழிந்தது. அனைவரும் கோவிலுக்கு செல்லலாம் என்பதை உறுதிப்படுத்திய நல்ல மனிதரை எவ்வாறு புகழ்வது? ஆனால், இது தெரியாமல் எத்தனை பேர் இருக்கின்றனர்? அவர்களை எல்லாம் இந்த நுால் சென்றடையட்டும்.
தேவாரப் பாடல்களிலே அற்புதமானது, ‘முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்...’ என்பதாகும். சிவகாமியின் சபதம் நாவலில் பலமுறை கல்கி கையாண்டிருப்பார். அதையும் இங்கே கொண்டு வந்து நேர்த்தியாகச் சொல்லியுள்ளார். நம்மாழ்வார், பாரதி, அபிராமி பட்டர் என்று சேர்த்திருப்பது சந்தோஷம்.
மாணிக்கவாசகர் எதற்காக அஞ்சுகிறார் என்பதை அறியும் போது மயிர்க்கூச்செறியாமல் இருக்க முடியாது. அதை நேர்த்தியாக சொல்லியிருப்பது நன்று.
– சுந்தர்