ராமாயணத்தில் மிக முக்கியமானது சுந்தர காண்டம். வானர வீரனின் அதிசயிக்கத்தக்க செயல்களை கொண்டது.
புண்ணியங்களிலேயே மிக உயர்ந்தது ஒரு உயிரை காப்பது தான். இங்கே, ராமன், சீதை என்ற இரண்டு உயிர்களை அல்ல... லட்சுமணன், பரதன், சத்ருக்னன், அவர்களை பெற்ற தாய்மார்கள், ஏன்... அயோத்தி மக்களுக்கே உயிர் கொடுத்தவன் அனுமன்.
அவன் மட்டும், ‘கண்டெனென் கற்பினுக்கினியை கண்களால்’ என்று, ராமனிடம் சொல்லாமல் இருந்திருந்தால், ராமாயணம் அந்த இடத்திலேயே முடிந்திருக்கும்.
என்ன தான் சுந்தர காண்டத்தில் நடந்தது என்று தெரிந்துகொள்ள இந்த புத்தகம் கையிலிருக்க வேண்டும். ஏனெனில், ஒன்று கம்பனை படித்திருப்பீர்கள் அல்லது வால்மீகியை நுகர்ந்திருப்பீர்கள். ஆனால், இந்த புத்தகத்தில் இருவரையும் ஒன்றிணைத்து விருந்து படைத்திருக்கிறார்.
இரு தரப்பும், இந்த காண்டத்தில் என்னென்ன வித்தியாசங்களை கையாண்டிருக்கின்றனர் என்பதை, நுாலைப் படித்தால் புரிந்து கொள்ள முடியும். அருகே நல்லவர்கள் வந்தாலே போதும்; நல்ல சகுனங்களும் வந்து விடும். அனுமன் அசோக வனத்துக்குள்வந்தவுடனேயே, சீதையின் இடது கண் துடிக்கிறது. பெண்களுக்கு இடது கண் துடிப்பது நல்ல சகுனம் என்பது கேள்விப்பட்ட விஷயம் தான்.
ஆனால், ஒரு வண்டும் நல்ல சகுனத்துக்கு அறிகுறியாக, ஒரு செயலை சீதையே அறியாமல் செய்கிறது. இதுவும் நல்ல சகுனமாம். அப்படி என்ன அந்த வண்டு செய்தது... இந்த புத்தகத்தில் விடை இருக்கிறது. இது போன்ற அற்புத தகவல்களுடன் ராமன் பட்டாபிஷேகத்தையும் இணைத்துள்ளது.
தவறாமல் படிக்க வேண்டிய அரிய தகவல் பெட்டகம்.
– தி.செல்லப்பா