நம் புத்திக்கு ஒன்று புரியவில்லை என்பதாலோ அல்லது ஒரு விஷயம் நம் மனதுக்கு ஏற்புடையதாக தோன்றவில்லை என்பதாலோ, ஒட்டுமொத்த சனாதன தருமத்தையுமே குறை சொல்வதோ, அது இருக்கலாகாது என்று கூறுவதோ முறையாக இருக்காது.
மொத்த வாழ்க்கை முறைக்கும் வேராக இருக்கும் சனாதன தருமத்தையே அடியோடு அழிப்பது என்றால், பெற்றோரை மதித்து நடத்தல், சத்தியத்தை பேசுதல், அற வழியில் வாழ்தல், அனைவரையும் நேசித்தல், பிறருக்கு உதவுதல், தன் கடமையை சரியாகச் செய்தல் போன்ற எல்லா நல்ல விஷயங்களையுமே அழிப்பதாகத் தான் பொருள்படும்.
இத்தனை நல்லறங்கள் இல்லாவிடில், மனித வாழ்வுக்கே அர்த்தமில்லாமல் போய்விடும்.
காலையில் எழுந்தவுடன் பல் தேய்ப்பது, நீராடிய பின் உணவு உட்கொள்வது, எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டுவது, பெற்றோரை மதிப்பது, உறவு- நட்பை பேணுவது, புறத்துாய்மை -அகத்துாய்மையை கடைப்பிடிப்பது, பிறருக்கு துரோகம் செய்யாமல் இருப்பது, கொடுத்த வாக்கை காப்பது போன்ற அறங்கள் மனிதருக்கான சனாதன தருமம்.
தந்தையின் வாக்கை மகன் பின்பற்றி நடப்பதே சனாதன தருமம். சங்க காலத்துக்கும் முன்பிருந்தே தமிழர்கள் சனாதன தரும கொள்கைகளை கடைப்பிடித்திருக்கின்றனர். மனிதருள் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேச்சுக்கே இடமில்லை.
அவரவர் செய்யும் செயல்களில் வேறுபாடுகள் இருந்தாலும், அனைத்து தரப்பு மனிதர்களையும் சமமாக பார்க்க வேண்டும் என்பதே சனாதன தரும கொள்கை. இது, தொன்றுதொட்டு பின்பற்றப்பட்டு வரும் வாழ்க்கை முறை.
சனாதன தருமத்தின் பன்முகங்கள் குறித்து தெளிவாக, பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் படைக்கப்பட்டுள்ள நுால்.
-– இளங்கோவன்