தீண்டும் இன்பம் – இந்த நுால் உங்களைத் தீண்டிவிட்டால் போதும்; எல்லாமே மாறிவிடும்.
வரலொட்டியாருக்கு ஜனனி என்ற பெண் அன்பென்னும் பாடத்தைப் போதிப்பது தான் மையக் கரு. ஜனனியின் பாத்திரத்தை தன் எழுத்து என்னும் உளியால் செதுக்கிச் செதுக்கி வடிவமைத்திருக்கிறார். அறிமுகமே அமர்க்களமாக இருக்கிறது.
ஆண்டாள் இயற்றிய நாச்சியார் திருமொழிக்கு எத்தனையோ வியாக்கியானங்கள் இருக்கின்றன. ஆனால், இந்த நுாலில் இருப்பது போல் பல கதாபாத்திரங்களையும், ஒரு இதமான சூழலையும் சித்தரித்து, பாசுரங்களை கண்ணீர் சிந்தச் சிந்த அனுபவித்து இதுவரை யாரும் விளக்கியதில்லை.
காயத்ரி, ஜெயஸ்ரீ, ஜானகி, அலமேலு போன்ற துணை பாத்திரங்களும் உயிரோட்டத்துடன் இருப்பது நிறைவான விஷயம். அதிலும் ஜெயஸ்ரீ பாத்திரம் ஒரு வாழ்வியல் பாடம். நாட்டில் நிறைய ஜெயஸ்ரீ இருக்கின்றனர்; அவர்களுக்கு உரிய சிகிச்சை தரப்பட வேண்டும் என்பதை அழகாகவும், அழுத்தமாகவும் சொல்கிறார்.
மரணத்தையும், காதலையும் மலருடன் ஒப்பிட்டு சொல்வது புதுமை. நல்ல கற்பனை ஆழம். ‘விண்ணீல மேலாப்பு’ என்று துவங்கும் பாசுரத்தின் விளக்கம் உருக்கம்.
‘வெற்றிக் கருளக்கோடியோன்’ என்று துவங்கும் பாசுரத்தின் ஆழத்தில் இருக்கும் சாரத்தை வெளிக்கொணர்ந்த வார்த்தை ஜாலம் சிலிர்க்க வைக்கிறது.
நாச்சியார் திருமொழியின் சில பாடல்களுக்கு பொதுவாக யாரும் துணிந்து வியாக்கியானம் செய்யமாட்டர். வயதான பெண்கள் மற்ற பெண்களுக்கு இலைமறைவு காய்மறைவாக அர்த்தம் சொல்வர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
அப்படிப்பட்ட பாசுரங்களைக்கூட துளி கூட விரசம் கலந்துவிடாமல் அழகாக விளக்கியிருக்கிறார். காலில் காயம் படாமல் கத்தியின் மேல் நடந்திருக்கிறார்.
மொத்தத்தில் தீண்டும் இன்பம் வாசிக்க வேண்டிய புத்தகம் அல்ல; அனுபவிக்க வேண்டிய அன்பு.
-– லதா நாராயணன்