ஆன்மிகமே அன்பு; அன்பே ஆன்மிகம்... இந்த கோட்பாட்டை வலியுறுத்த நடிகை செய்த தவம் தான் நுாலாக மலர்ந்துள்ளது.
ஆசிரியரின் சிறப்பே கதை மாந்தருடன் அவரும், அந்த பச்சை புடவைக்காரியும், அவரை சுற்றி வாழும் மனிதர்களும், எது நிஜம், எது கற்பனை பாத்திரம் என்று பிரிக்க முடியாதபடி ஒன்றிணைந்து கதையாய் மலர்வதில் தான் சிறப்பு பெறுகிறது.
இதிலும் ஆடிட்டர் சரவணன், டாக்டர் கீர்த்தி, வக்கீல் சிவகாமி, செயல்வீரர் மணி, மாமனிதர் டாக்டர் சுவாமிநாதன் ஆகிய கதாபாத்திரங்களுடன் அந்த இறைவியும், ஆசிரி யரும் நமக்கு அன்பை பொழிகின்றனர். அன்பே சிறந்த வழிபாடு என்று போதிக்கின்றனர்.
சாரா ஜார்ஜ் காதல், அருண் வித்யா காதல் கிளைமாக்ஸ், ஹாலிவுட் நடிகை வினோனா ரைடர் காதல் என்று துாய காதலர்களும் அதற்கு மெருகு சேர்க்கின்றனர்.
கனிந்த துாய காதலே பக்தி என்று விளக்கம் பெற்றுள்ளது. தமிழ் வளர்த்த மதுரையில் நடக்கும் கதையில், மதுரையின் மைந்தன் எழுதும் கதையில் தமிழ் வளம் பற்றி சொல்ல தேவையில்லை. அற்புதமாக சொல்லப்பட்டுள்ளது.
பாதாள சாக்கடையில் வாழும் பாச்சை குஞ்சு போல் இருந்த நடிகையின் மன அன்புப் பொறியை, ஆசிரியரின் மனதில் இருந்து பொங்கிய வாஞ்சை எவ்வாறு இறையிடமே கொண்டு சேர்த்தது என்று புரிய, அவளிடமே கேளுங்களேன். தவம் எப்படி செய்வது என்று புரிய வைக்கும் நுால்.
– லதா நாராயணன்