எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள், சராசரி பாமரருக்கும் அருள் புரிவதற்காகப் பற்பல வடிவங்கள் எடுக்கிறது. திருக்கோவில்களில் எழுந்தருளியுள்ள தெய்வத்திருமேனிகளை காட்சிப்படுத்தும் ஓவிய நுால். ஓவியங்களுக்கு சிறப்பான விளக்கங்களும் தரப்பட்டுள்ளன.
சன்னிதானத்தின் உள்ளிருக்கும் இறைவடிவை முழுமையாகக் காண்பதென்பது சாத்தியமா. அப்படிப்பட்ட இறைவடிவை மனமார தியானிக்கும் வகையில் இந்த ஓவியங்கள் அமைந்துள்ளன. அடி முடி காண இயலாத அருட்பெருஞ்சோதி சிற்பச் சுடராகி, ஓவிய மலராகி, துாரிகைக்குள் துளிராகி, கண்ணுக்குள் கருவாக வந்துள்ளது.
முன்னோர் அகக்கண்ணில் கண்ட இறைக்காட்சியை சாதாரண மனிதர்களும் உணர்ந்து அனுபவிக்கவே திருக்கோவில்களைக் கட்டினர். அந்தக் கோவில் சார்ந்த கலை அனுபவம் என்ற கடலின் ஒரு பகுதியே ஓவியக் கலை.
தமிழக ஓவியக் கலை மரபு, நீண்ட வரலாறு கொண்டது. 20ம் நுாற்றாண்டில், தெய்வ வடிவங்கள் இல்லந்தோறும் சென்று சேர அச்சுக் கலைத் தொழில்நுட்பம் கைகொடுத்தது.
கருவறைத் தெய்வங்களோடு நின்று விடாமல், கணபதி, அம்மை, சிவபெருமான் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் ஆகமங்களில் கூறப்பட்ட வடிவங்களை ஓவியங்களாக்கிய பெருமை உடையவர் மணிவேல். ஓவியத் துறையில், 40 ஆண்டுகளாக இடைவிடாது உழைத்தவர். கருவறைத் தெய்வங்களை அலங்கார அழகோடு முழுமையாக வரைந்து வெளிக் கொணர்ந்துள்ளது சிறப்பு.
அவர் வரைந்த சில ஓவியங்கள், விளக்கங்களோடும், தெய்வங்கள் தோன்றிய வரலாறுகளோடும் இந்த புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. தெய்வங்களுக்கான வரலாறு, ஓவியங்களுக்கான விளக்கங்களை சைவத் தமிழ் அறிஞர் பேராசிரியர் மதுசூதனன் கலைச்செல்வன் நுட்பத்துடனும் எளிமையாகவும் எழுதியுள்ளார்.
புத்தகத்தில் உள்ள கருவறை ஓவியங்களைத் தேவையான அளவு தனிப்படங்களாக இணையதளம் வழியாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
-– இளங்கோவன்