‘சுயசரிதம் எழுதுகிற ஆணோ, பெண்ணோ தன்னைப் பத்தி மட்டும் எழுத முடியாது. அவங்க அவங்க வாழ்க்கையிலே எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கும். அந்த சம்பவங்களை பற்றி எழுதும் போது தானே, கோர்வையாக சுயசரிதம் வரும்.
‘என் வாழ்க்கையில சம்பந்தப்பட்ட சில பேர், முக்கியமானவங்க என்னை தனியாக கான்டாக்ட் பண்ணி’ அவங்களைப்பத்தி இந்த கட்டுரை தொடரிலே எந்த நியூஸும் வரக் கூடாது. அவங்களைப் பற்றி நான் எழுதுகிறதை விரும்பலைங்கிறதைத் தெரிவிச்சாங்க...’
– சுயசரிதை தொடரை பாதிலேயே நிறுத்தியதற்காக, ஜெயலலிதா தெரிவித்த கருத்துகள் இடம்பெற்றுள்ளன. இதுவே, இப்புத்தக முக்கியத்துவத்தை விளக்குகிறது.
பத்திரிகையாளர் ரஜத் பேட்டி கண்டு குமுதம் வார இதழில், ‘மனம் திறந்து சொல்கிறேன்...’ என்ற தலைப்பில் வெளிவந்த தொடர், நுால் வடிவம் கண்டிருக்கிறது. உரைநடை சிறப்பாக கைவரப்பெற்றிருக்கிறது.
‘நான் இப்போது போயஸ் கார்டனில் இருக்கிறேன். இரண்டரை வருடங்களாக என்னை தேடி யாரையும் இங்கே வரவிடுவதில்லை. இதை எனக்கு நானே விதித்த வனவாசம்னு சொல்லலாம்...’
இப்படித் தான், ஜெயலலிதா சுயசரிதையை துவங்குகிறார். தன்னம்பிக்கை, தைரியம் ஒவ்வொரு வார்த்தையிலும் பிரதிபலிக்கிறது. ஒளிவு, மறைவு இல்லை. யாருக்கும் அஞ்சவே இல்லை. ஆடை மீதான பிரியம், பள்ளி படிப்பு, நடிகையான கதை, பருவ வயதில் ஈர்ப்பு, எம்.ஜி.ஆர்., சந்திப்பு, படப்பிடிப்பு சம்பவங்களை விவரித்திருக்கிறார்.
நான்கு படங்கள் நடித்திருந்த காலத்துடன், இத்தொடர் திடீரென நிறுத்தப்பட்டது. முழுமையாக வெளிவந்திருந்தால் பல்வேறு சம்பவங்கள் தெரிந்திருக்கும். தமிழக அரசியல் வரலாற்றில் இடம்பிடித்த ஜெயலலிதாவின் ஆரம்ப கால சுயசரிதை நிச்சயம் ரசிக்க வைக்கும்.
--– சி.கலாதம்பி