பச்சைப் புடவைக்காரியின் தவப்புதல்வரான வரலொட்டி ரெங்கசாமியின் இன்னொரு தரமான படைப்பு அன்பே ஆனந்தம். அன்பின் அடித்தளத்தின் மேல் எழுப்பப்பட்ட கட்டடம் என்பதால், ஆனந்தத்தை அதிகமாகவே தருகிறது.
நமக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட கதை சொல்லும் பாங்கில், பார்கவி எனப்பட்ட இக்கதையின் நாயகிக்கு ஆசிரியர் எடுத்துரைக்கும் கதைகள், அறிவுரைகள், போதனைகள் என்ற கலவையின் வடிவாக எழுதப்பட்ட அற்புதமான நுால். இந்தக் கதையில் சில மர்ம முடிச்சுகளும் ஆன்மிகத்தோடு சேர்ந்து கொள்வதால் தனித்துவம் பெறுகிறது.
புலன் இன்பங்களை மட்டுமேநாடுவது ஆபத்தானது என்பதை நன்றாக புரிய வைக்கிறார் ஆசிரியர். வாழ்க்கையில் பரபரப்பாக பயணிப்பவன் மட்டுமல்லாமல், நடைமேடையில் அமர்ந்து அவ்வாறு ஓடுபவர்களை பார்த்துக் கொண்டே இருப்பவனும் நல்ல பாடங்களை கற்றுக் கொள்கிறான் என்பது வித்தியாசமான நல்ல கருத்து.
சொர்க்கம் என்பதற்கு ஆசிரியர் கொடுத்துள்ள விளக்கம் வியப்படைய வைக்கிறது. காளிதாசன், காளமேகம் போன்ற கவிஞர்கள் வாழ்க்கை உணர்த்தும் பாடமும், ஷேக்ஸ்பியரின் கவிதை நுணுக்கமும், ஆசிரியரால் மேற்கோளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு நன்றாக கையாளப்பட்டுள்ளது.
இன்னொருவருக்கு தரக்கூடிய மிக அற்புதமான பரிசு ஒருவருடைய நேரம் தான் என்பது சிலிர்க்க வைக்கும் சித்தாந்தம். காதலில் வெற்றி என்பது என்ன? தோல்வி என்பது என்ன என்பது பற்றிய ஒரு சிக்கலான கருத்தை ஆசிரியர் தரமாகக் கையாண்டுள்ளார்.
அனைவருக்கும் படியளக்கும் பராசக்தி எவ்வாறு நம் தேவைகளை பூர்த்தி செய்கிறாள் என்ற ஒரு நிறைவான கருத்தோடு நிறைவு பெறுகிறது. மனம் வருடும் நல்ல ஆன்மிகப் பதிப்பான இதை படித்தால் சிலிர்ப்பது உறுதி.
–- டாக்டர் எஸ்.எம்.எஸ்.,