தெய்வாம்சம் மிக்க தமிழ் படைப்புகளில் உள்ள மேன்மையை வரலாற்று ரீதியாக அறியத்தரும் நுால். பல நுால்களில் உள்ள சாராம்சங்களை ஒரே புத்தகத்தில் சுருக்கமாக தருகிறது.
பழந்தமிழ் படைப்புகளுக்கு கால எல்லை இல்லை. இவற்றில் வரலாற்றில் தடம் பதித்துள்ள மேன்மையான, 98 படைப்புகளை தெளிவாக அறிமுகம் செய்துள்ளது. புத்தக உள்ளடக்கத்தை அறியும் வகையில் சுருக்கக் குறிப்புடன் தரப்பட்டுள்ளது. படைப்புகள், படைப்பாளர் பெருமையை உணரவும், ஏற்கனவே அறிந்த உயர்ந்த கருத்துகளை நினைவுபடுத்தவும், கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும் உதவுகிறது.
தெய்வாம்சம், பக்தி, வாழ்வி யல், புராண மரபு, வரலாறு, கவிதைச்சிறப்பு என பல்வேறு பெருமைகள் உடைய நுால்களை தனித்தனி கட்டுரைகள் வழியாக அறிமுகம் செய்துள்ளது. அகத்தியம், தொல்காப்பியம், திருமுருகாற்றுப்படை, எட்டுத்தொகை, புறநானுாறு, திருக்குறள் என பழந்தமிழ் நுால்களின் சிறப்பை அள்ளித் தருகிறது. வாழும் அறம் புகட்டும் ஆசாரக்கோவை, பண்பாட்டை போதிக்கும் பதினெண் கீழ்க்கணக்கு போன்றவற்றில் உறைந்துள்ள கருத்து புதையலை எடுத்துக் காட்டுகிறது.
கந்த புராணம், விநாயக புராணம், திருவிளையாடல் புராணம் போன்ற புராண கதைகளில் புதைந்து கிடக்கும் நெறிகளை எடுத்துரைக்கிறது. பக்தி நெறியை ஊட்டும் அபிராமி அந்தாதி, ராம நாடக கீர்த்தனை, திருவருட்பா, மீனாட்சி பிள்ளைத்தமிழின் சிறப்புகளை எளிமையாக விரித்துரைக்கிறது.
அந்தந்த நுால்களில் பொதிந்துள்ள கருத்துகளின் அடிப்படையில் தனித்தனி கட்டுரைகளாக தருகிறது. அவற்றின் பெருமிதம், படிப்பதால் வாழ்வில் ஏற்படும் உயர்வை சுட்டிக்காட்டுகிறது.
அதிகம் பேசப்படாத கம்பநாட்டாழ்வாரின் ‘ஏர் எழுபது’ போன்ற நுால்களின் சிறப்பும் கட்டுரையாக இடம் பெற்றுள்ளது. பக்தி நெறி ஊட்டும் பெரியபுராணத்தை தேசிய இலக்கியம் என சுட்டிக்காட்டி சிறப்பிக்கிறது. பழந்தமிழ் புலவர் அவ்வையார் குறித்த ஐயங்களை போக்கும் வகையில் ஆய்வுக் கருத்துகள் தரப்பட்டுள்ளன.
சித்திர கவி, சிலேடைத் தமிழ், நாடகக்கலை, உரையாசிரியர், தமிழ்ச் சான்றோர் என பலவித கோணங்களில் தமிழ் மொழி பெருமையை விரித்துரைக்கிறது. இலக்கியங்களில் உள்ள பன்முக சிறப்புகளை எடுத்துரைக்கிறது. தமிழ் மொழியில் எழுதப்பட்ட பல்வேறு கருத்துள்ள நுால்களை வரலாற்று ரீதியாக அறிமுகம் செய்து பல்சுவையை பருகத்தருகிறது. அற்புத களஞ்சியமாக மலர்ந்துள்ள நுால்.
– ராம்