கோவில் கட்டி கும்பிடும் அளவு, ரசிகர்களை ஈர்த்து வைத்திருக்கின்றனர் திரைப்பட நடிகர்கள். மறைந்த எம்.ஜி.ஆரை தெய்வமாகவே பார்த்தனர். அநியாயத்தை தட்டிக் கேட்கும் அவர் நடித்த திரைப்படங்கள், அவரது அரசியல் வாழ்வை வளமையடையச் செய்தன.
திரையில் நடிகையாக ஜொலித்து, தைரிய குணத்தால் முதல்வராக உயர்ந்தவர் ஜெயலலிதா. இவற்றை பார்த்து பல நடிகர்கள் அதிகார நாற்காலியில் அமர்ந்து விடமாட்டோமா என கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகின்றனர்.
சினிமாவில் நடிக்க அரிதாரம் இட்டோர், அரசியல் களத்திலும் அரிதாரம் பூசிக்கொண்டு களமிறங்கியுள்ளனர். அதில், இன்றைய பிரபலம் நடிகர் விஜய் முக்கியமானவர்.
சில கட்சிகளிடம், ‘எனக்கு முக்கிய பதவிகளில் தலைமைப் பொறுப்பு கிடைக்குமா’ என அலைந்து தேடியிருக்கிறார். நடிப்புக்கு வந்த போதே, ஒரு நோயும் இருந்திருக்கிறது. அப்படியா... என ஆச்சரியப்படுவோர், இந்தப் புத்தகத்தைப் படித்தால், விடையை தெரிந்து கொள்ளலாம்.
அரசியல் அதிகாரத்தில் அமர விரும்பிய இன்னொரு நடிகர் சரத்குமார்; என்னென்னவோ வித்தைகள் செய்தும் ஒன்றும் நடக்கவில்லை. இரவில் மனைவி நடிகை ராதிகாவிடம் ஆலோசனை பெற்று, தேசிய கட்சியில் ஐக்கியமாகி விட்டார். இவரது அரசியல் வாழ்வில் என்ன நடந்தது... தக்க பதில் இருக்கிறது.
விஜயகாந்த் உட்பட தமிழக அரசியலில் நடிகர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது என்பதை எடுத்துக் கூறுகிறது.
நடிகர் ரஜினி கட்சி துவங்க எம்.ஜி.ஆரே டிப்ஸ் கொடுத்தது, இன்று வரை அவர் கட்சி துவங்காமல் போனதற்கான காரணம் பற்றியும் பேசுகிறது.
ஒரு நடிகை கன்னம் மீது, அரசியல் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு மோகம் என தகவல்கள் நீண்டு போகிறது.
எளிய நடையில் நடிகர்களின் அரசியல் பின்புலத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தி தரும் நுால்.
– தி.செல்லப்பா