ஆழமான ஆன்மிக கருத்துகளை எளிய நடையில் சொல்கிறது இந்த புத்தகம். அனுபவ பகிர்வு போல துவங்கி, பகவத் கீதையின் முக்கிய சாராம்சத்தை வாழ்வின் முன்னேற்றம், அன்பு, கடமை நோக்கில் விளக்குகிறது.
இதில் உள்ள ஆன்மிக முத்துகளில் சில...
பாவம் செய்தவனாக இருந்தாலும் கூட அன்பால் மட்டுமே எல்லா தீமைகளையும் கடந்து செல்ல முடியும். பகவத் கீதை குலத்தொழிலை ஆதரிக்கிறது என சிலர் கூறுவர். ஆனால், அதில் கூறப்பட்டிருப்பதோ, ‘உன் திறமை எதுவோ அதில் கவனம் செலுத்து; மற்றவற்றை தேர்ந்தெடுத்தால் உனக்கும், சமுதாயத்திற்கும் பயன் தராது.
விரும்புவதை செய்யுங்கள். ஏனென்றால் அது உங்கள் இயல்பு. இயல்பிற்கு எதிராக செல்லாதீர். அப்படி எதிராக செய்தாலும் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. ஆன்மாவிற்கு பிறப்பும், இறப்பும் இல்லை.
பழைய ஆடைகளை களைந்து புதியதை அணிவது போல், ஆன்மா பழையனவற்றை நிராகரித்து புதிய உடல்களை அலங்கரிக்கிறது.
ஒரு நாளைக்கு இத்தனை முறை, இந்த முறையில் என்னை வணங்காவிட்டால் உன்னை நேசிக்க மாட்டேன் என்று கிருஷ்ண பரமாத்மா ஒருபோதும் சொல்லவில்லை. கீதை என்பது 10 கட்டளைகள் அல்ல. அப்படி செய்திருந்தால், உலகம் கண்டிராத மிகப் பெரிய ஆசிரியராக அவரை வணங்கியிருக்க மாட்டோம்.
கீதை சுலோகங்களுக்கு விளக்கம் கொடுக்க உதாரணங்கள், சம்பவங்கள், குறிப்பாக அன்பு என்றால் என்ன என்று விளக்க சங்கராச்சாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், ராமானுஜாச்சார்யா, புத்தர், ஜலாலுதீன், பயாஜிட், புனித பிரான்சிஸ் மேற்கோள்கள், கற்பனை சம்பவங்கள் தரப்பட்டுள்ளன. மொழி நடை, கதை சொல்வது போல் எளிமையாக உள்ளது. அதே சமயத்தில் ஆழமான தத்துவ சிந்தனைகளை கொண்டுள்ளது.
ஆன்மிக மற்றும் தத்துவத்தில் ஆர்வமுள்ளோருக்கு புதுமை பார்வையையும், ஆழ்ந்த சிந்தனையையும் அளிக்கும் நுால்.
-– இளங்கோவன்