ஒரு பஞ்சாங்கம் என்றால் தமிழ் தேதி, ஆங்கில தேதி, நட்சத்திரம், திதி இன்னும் சில அம்சங்களோடு முடிந்து விடும்; குறைந்தளவு பக்கங்களே இருக்கும். தமிழக கோவில் திருவிழாக்கள், முக்கிய விழாக்களை நெருக்கியடித்து அச்சிட்டிருப்பர். அமாவாசை என்றால் ஒரு குறியீடு மட்டுமே இருக்கும்.
ஆனால், பஞ்சாங்க கணிதமணி ஜி.ஸ்ரீனிவாசன், பிறக்க இருக்கும் தமிழ் புத்தாண்டான விசுவாவசு வருடத்துக்கு கணித்துள்ள பஞ்சாங்கம் அப்படிப்பட்டதல்ல. மொத்தம் 432 பக்கங்களில் நாவல் படிப்பது போல கீழே வைக்க முடியாத அளவுக்கு தொகுத்து தரப்பட்டுள்ளது.
திருவிழாக்களா அதற்கு தனிப்பக்கம், முகூர்த்த நாட்களா... அவற்றுக்கு தனிப்பக்கம், நாம் முக்கியமாக கடைப்பிடிக்கும் பிதுர் வழிபாட்டுக்குரிய தர்ப்பண நாட்களா... அவற்றுக்கு தனி பக்கம், வாஸ்து நாட்களுக்கு தனிப்பக்கம்... இப்படி ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பக்கம்.
இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், இதுவரை எந்த பஞ்சாங்கத்திலும் இடம் பெறாத புதுமையாக, ஆண்டின் 365 நாட்களுக்கும் ஒவ்வொரு பக்கம் ஒதுக்கி தேதி, கிழமை, நட்சத்திரம் துவங்கும் நேரம், முடியும் நேரம், யோகம், திதி, கரணம், மாத விழாக்கள் என அத்தனையையும் தனித்தனியாக தந்துள்ளதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
பஞ்சாங்கம் என்றால், ஏதோ ஒரு ஆண்டுக்குரியது என்றில்லாமல், எல்லா ஆண்டுகளுக்கும் பயன்படும் வகையில் கணித்து தந்துள்ளது மிகவும் சிறப்பு. பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில் இருப்பது சிறப்பிலும் சிறப்பு.
இது கையில் இருந்தால், ‘யாமறிந்த பஞ்சாங்கங்களிலே, இந்த திருக்கணித பஞ்சாங்கம் போல், பூமிதனில் எளிதாக யாரும் கணித்ததில்லை என்பது உண்மை... வெறும் புகழ்ச்சியில்லை’ என்று பாடவே துவங்கி விடுவீர். அற்புத பஞ்சாங்க நுால்.
– தி.செல்லப்பா