தமிழறிஞர் அவ்வை நடராஜன் எழுதிய மதிப்புரை, முன்னுரை, அணிந்துரைகளின் தொகுப்பு நுால். சிவஞானபோத விளக்கவுரை, கி.வா.ஜ.,வின் திருக்குறள் ஆராய்ச்சி மறுபதிப்பு போன்ற புத்தகங்களுக்கு எழுதிய முன்னுரைகள் இடம் பெற்றுள்ளன. அவை, தமிழ் மொழிக்கு உரைகல் என பறைசாற்றுகின்றன.
‘சிந்தைக்கினிய செந்தமிழ்க் காவலர் -சில நினைவு’ என்ற தலைப்பில், பச்சையப்பன் கல்லுாரியில் மாணவனாக இருந்த பசுமையான நாட்களை நினைவுகூர்ந்து எழுதப்பட்டுள்ளது. சங்க இலக்கியப் பாடல்களையும், திருக்குறளையும், பக்தி இலக்கியங்களையும் உரிய இடங்களில் மேற்கோளாக காட்டியிருப்பது, இலக்கியத்தில் ஆழ்ந்த புலமையை வெளிப்படுத்துகிறது. தமிழ் ஆர்வலர்களுக்கு உகந்த நுால்.
- புலவர் சு.மதியழகன்